அரசு மருத்துவமனையில் பாம்புகள் படையெடுப்பு-மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் அச்சம்

வருசநாடு : கண்டமனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புகள் படையெடுத்து வருவதால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் அச்சத்தில் உள்ளனர்.கண்டமனூர் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு கர்ப்பிணிகளுக்கும், பொதுமக்களுக்கும் சிகிச்சை அளிக்க தனித்தனி வார்டுகள் உள்ளன.

கணேசபுரம், எட்டப்பராஜபுரம், வேலாயுதபுரம், புதுராமச்சந்திராபுரம், ஆத்தங்கரைப்பட்டி, அண்ணாநகர், லட்சுமிபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அடிக்கடி பாம்புகள் வருவதாக அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்களும், செவிலியர்களும், மருத்துவர்களும் பீதியில் உள்ளனர்.

இது குறித்து கண்டமனூர் கிராமவாசி கருப்பையா கூறுகையில், ‘கடந்த சில மாதங்களுக்கு முன், கண்டமனூர் பகுதிகளில் அதிக மழை பெய்தது. இதனால், அரசு மருத்துவமனையைச் சுற்றி புல், பூண்டு முளைத்து புதர்மண்டிக் கிடக்கிறது. பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள், தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனை வருவதற்கு அச்சப்படுகின்றனர். மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள், கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: