கறம்பக்குடியில் 10 ஆண்டுகளாக இடிந்து விழும் நிலையில் நரிக்குறவர் காலனி குடியிருப்புகள்-புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை

*மக்களின் குரல்

கறம்பக்குடி : கறம்பக்குடியில கடந்த பத்து ஆண்டுகளாக பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள நரிக்குறவர் காலனி குடியிருப்பு வீடுகளை புதிதாக கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி பகுதியாக உள்ளது. இந்த பேரூராட்சியில் சடையன்தெரு, மழவராயன் தெரு, சாத்தான் தெரு, சேவுகன் தெரு, வடக்கு தெரு, கண்டியன் தெரு, அக்ரகாரம் தெரு, தென்னகர், நரங்கியபட்டு, சுலைமான் நகர், செட்டியார் தெரு வாணிய தெரு போன்ற பல்வேறு பகுதிகள் அமைந்து 15 வார்டுகள் செயல்பட்டு வருகின்றன.

30,000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் நரிக்குறவர் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள நரி குறவர்கள் கடந்த 1984 ஆண்டுக்கு முன்பு கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் ஒடப்பவிடுதி ஊராட்சியில் குடியிருந்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கு இடம் கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்ததன் பேரில் அப்போதைய அதிமுக முதல்வராக இருந்த எம்ஜிஆர் நரிகுறவர் மக்களுக்கு கறம்பக்குடியில் இடத்தை தேர்வு செய்து அதற்கு நிதியும் ஒதுக்கி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டு சுமார் 37 ஆண்டுகளாக நரி குறவர்கள் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து வீடுகளும் இடிந்து விழும் அபாய நிலையில்ம இருந்து வருவதால் புதிய வீடுகள் கட்டி தரக்கோரி பேரூராட்சி மற்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் அதிமுக அரசு எடுக்க வில்லை. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு ஏற்பட்ட கஜா புயலால் மேலும் வீடுகள் பாதிக்கப்பட்டது. அப்போது வீடுகளை பார்வையிட வந்த கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆறுமுகத்திடம் அனைத்து வீடுகளையும் உடனடியாக சீரமைத்து புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து காலனி குடியிருப்பில் வசிக்கும் நரிக்குறவ பெண்மணி மைனர் மாரியம்மாள் கூறும்போது, நாங்கள் பலமுறை பழுதடைந்த நரிக்குறவர் காலனி வீடுகளை அப்புறப்படுத்தி புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என்று சம்மந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் மாவட்ட ஆட்சி நிர்வாகம் அமைச்சர் மற்றும் தொகுதி எம்எல்ஏவிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்கள் நரிக்குறவர் காலனி குடியிருப்பு பொது மக்கள் அரசையும் அதிமுகவையும் புறக்கணிப்போம் என்றார்.

இதுகுறித்து திமுக மாவட்ட பிரதிநிதியும், 14வது வார்டு பேரூராட்சி முன்னாள் திமுக கவுன்சிலருமான செல்வராஜ் கூறும்போது, நரிக்குறவர்காலனி குடியிருப்புகளுக்கு திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு உதவிகளை செய்து கொடுத்தோம்.

ஆனால் தற்போது அதிமுக அரசு நரிக்குறவர் காலனி வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அப்பகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக சீரமைத்தும் புதிய வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும். மேலும் புதிதாக கழிப்பறை கட்டி கொடுக்க வேண்டும். குழந்தைகளின் நலன் கருதி பால்வாடி அமைக்க வேண்டும். அப்பகுதி பொது மக்களின் நலன் கருதி கோயில் கட்டுவதற்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கூறினார்.

37 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நரிக்குறவர் காலனி குடியிருப்பு பொது மக்களின் நலன் கருதி 10 ஆண்டுகளாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள நரிக்குறவர் காலனி வீடுகளை அகற்றி புதிய வீடுகளை அரசு கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>