×

காங். ஆட்சிக்கு வந்தால் அசாமில் சி.ஏ.ஏ-வை ஒருபோதும் அமல்படுத்த மாட்டோம்!: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி வாக்குறுதி

டிஸ்பூர்: அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த மாட்டோம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டப்பேரவை காலம் வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அசாம் சட்டப்பேரவை தேர்தலையொட்டி சிவசாகர் என்ற இடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்-வும் அசாமை பிளவுபடுத்த முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினார். தானும், காங்கிரஸ் தொண்டர்களும் அசாம் ஒப்பந்த உடன்பாட்டை பாதுகாப்போம் என அவர் உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், அசாமை யாராலும் பிரிக்க முடியாது. அசாம் ஒப்பந்தம் அமைதியைக் கொண்டு வந்து உள்ளது. அது அசாம் மாநிலத்தின் காவல்.

அசாம் ஒப்பந்தத்தை தொடவோ, வெறுப்பை பரப்பவோ முயற்சிப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி தக்க பாடம் கற்றுத் தரும் என குறிப்பிட்டார். கொரோனா காலத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து அவரது நண்பர்கள் இருவரின் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டார் என குற்றம்சாட்டிய ராகுல், அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எந்த சூழ்நிலையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த மாட்டோம் என வாக்குறுதி அளித்தார்.


Tags : CAA ,Assam ,Rahul Gandhi , Cong. Rule, Assam, CAA, Election Campaign, Rahul Gandhi
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்