×

மனம் திருந்தி சரணடைந்த நக்சலைட்டுகள் 15 பேருக்கு காதலர் தினத்தில் திருமணம் : சத்தீஸ்கர் காவல்துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

ராய்ப்பூர் : மனம் திருந்தி சரணடைந்த நக்சலைட்டுகள் 15 பேருக்கு காதலர்  தினத்தில் காவல்துறையினர் திருமணம் செய்து வைத்துள்ள நிகழ்வு வரவேற்பை பெற்றுள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா, சுக்மா உள்ளிட்ட நகரங்கள் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்தவையாகும். காவல்துறையின் எச்சரிக்கையை அடுத்து கடந்த ஆண்டின் மத்தியில், 50க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர். மனம் திருந்தி சரண் அடைந்த அவர்களின் மனம் மகிழும் வகையில், காதலர் தினமான நேற்று அவர்களில் 15 பேருக்கு அவர்களின் உறவினர்கள் முன்னிலையில் சத்தீஸ்கர் காவல் துறையினர் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்தில் ஏரளாமான காவல்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசுகளை வழங்கினர். மனம் திருந்தி சரணடைந்த நக்சலைட்டுகள் நடவடிக்கை கடந்த 6 மாதங்களாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. அப்போது  அவர்களது நடவடிக்கைகள் திருப்தி அளித்ததைத் தொடர்ந்து, சிலருக்கு தொழில் தொடங்க உதவி செய்துள்ள சத்தீஸ்கர் காவல் துறையினர் 15 பேருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தண்டேவாடா எஸ்.பி.  தற்போது திருமணம் செய்து கொண்டுள்ள அனைவரும் நக்சலைட்டுகள், அவர்களது தலைக்கு பரிசும் அறிவிக்கப்பட்டு இருந்தது.அவர்களில் 15 பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இறுதி வரை அவர்கள் பழைய வாழ்க்கைக்கு திரும்பாமல் இருப்பதற்கு இந்த சமூக கட்டமைப்பு உதவும் என்று நம்புகிறோம்,என்றனர்.


Tags : Naxalites ,Chhattisgarh , சத்தீஸ்கர்
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18...