தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை ஏற்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மசோதா நிறைவேற்றப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

சென்னை: தேவேந்திர குல வேளாளர்களின் பெயர் மாற்றம் தொடர்பான மசோதா நடப்பு நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தங்களை தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் தேவேந்திரகுல வேளாளர் சகோதர, சகோதரிகள், கோரிக்கையை மத்திய அரசு ஏற்று கொள்கிறது. அவர்கள் இனி, பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுவார்கள். 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர்கள் என அழைக்கப்படுவார்கள். தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஆய்வு செய்து அறிக்கை அளித்த தமிழக அரசுக்கு நன்றி. இந்த கோரிக்கையை தமிழக அரசு ஆதரித்து வந்துள்ளது.

டெல்லியில் 2015ல் தேவேந்திர குல வேளாளர் பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை என்னால் மறக்க முடியாது.  காலனி ஆதிக்கவாதிகள் அவர்களது பெருமையையும், கண்ணியத்தையும் அகற்றியது குறித்த கவலையை காணமுடிந்தது.

பல தசாப்தங்களாக எதுவும் நடக்கவில்லை. பல அரசுகளிடமும் தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர்களிடம் நான் ஒன்றைச் சொன்னேன். அவர்களது தேவேந்திர என்னும் சொல் என்னுடைய பெயரின் நரேந்திர என்பதை ஒத்துள்ளது என்று அவர்களிடம் கூறினேன். அவர்களது உணர்வுகளை நான் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த முடிவு பெயர் மாற்றத்தை விட மேலானது. இது நீதி, கண்ணியம், வாய்ப்பு ஆகியவை பற்றியது. தேவேந்திர குல சமுதாயத்தினரின் கலாச்சாரத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகமுள்ளது. அவர்கள் நல்லிணக்கம், நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றைக் கொண்டாடுகின்றனர். அவர்களது நாகரிகமான இயக்கம். தன்னம்பிக்கையையும், சுய மதிப்பையும் நிரூபிப்பதாக உள்ளது. அவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெயர் திருத்த மசோதா, பார்லிமென்ட் கூட்டத்தில், துவக்கத்திலேயே தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>