×

அதிமுக ஆட்சியாளர்கள் கமிஷன் அடித்தே ரூ.5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளியாக்கி விட்டனர்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை அதிமுக ஆட்சியாளர்கள், கமிஷன் அடித்தே ரூ.5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக்கி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’  நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசியதாவது: பண்பாட்டு பெருமையும், சிறப்பும் கொண்ட பூம்புகார் மண்ணில் அ.தி.மு.க. ஆட்சி மீதான உங்கள் புகார்களை வாங்குவதற்காக நான் வந்துள்ளேன். தவறு செய்தவன் மன்னவன் ஆனாலும் அதனை துணிச்சலாக வந்து கண்ணகி கேள்வி கேட்டதை போலக் கேட்கக் கூடியவர்களாக நீங்கள் கூடியிருக்கிறீர்கள்.

பாண்டிய நெடுஞ்செழிய மன்னன் அறியாமல் அவசரத்தில் தவறு செய்து விட்டான். அதனால் கண்ணகி கேட்டதும் அவன் தனது தவறை உணர்ந்தான். நான் தவறு செய்து விட்டேன் என்று அந்தக் காலத்து மன்னன் சொன்னான். இன்றைய ஆட்சியில் பழனிசாமியாக இருந்தாலும், அவரது அமைச்சரவை சகாக்களாக இருந்தாலும் தெரிந்தே தவறு செய்பவர்கள். அந்த தவறை கூச்சமில்லாமல் செய்பவர்கள். ஊழல் செய்வதற்கே தலைமை செயலகத்திற்கு வந்தவர்கள். கமிஷன் அடித்தே ரூ.5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக்கியவர்கள். 50ஆண்டுகள் பின்னுக்குதள்ளியதுதான் அதிமுக அரசின் சாதனை. அதனால்தான் அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

முதலமைச்சர் பழனிசாமியை பொறுத்தவரை அவருக்கு இது லாட்டரியில் விழுந்த லக்கி ப்ரைஸ். அப்படிக் கிடைத்த பதவியை 4 ஆண்டு காலமும் வீணடித்துவிட்டார் என்பது தான் வேதனை தரக்கூடியது. தேர்தலுக்கு முந்தைய மாதத்தில் மட்டும் ஏதோ இந்த நாட்டுக்கு நன்மை செய்பவரைப் போல பழனிசாமி நடித்துக் கொண்டு இருக்கிறார். 2 நாட்களுக்கு முன்னால் உடுமலைப்பேட்டையில் பேசிய பழனிசாமிக்கு இப்போது தான் தனக்கு கொஞ்சம் ரோஷம் உண்டு என்பதை போல பேசி இருக்கிறார். பாஜ அரசிடம் அ.தி.மு.க. அடிமையாக இல்லை. எதை தட்டிக் கேட்க வேண்டுமோ அதைத் தட்டிக் கேட்போம் என்று பேசி இருக்கிறார். இன்னும் பதவிக்காலம் முடிய சில வாரங்கள் தான் இருக்கிறது.

சென்னையில் இன்று (நேற்று) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வந்தார். தங்கள் கட்சி தமிழ்நாட்டில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்காக மோடியும் ஒரு ஷோ காட்டுவதற்காக வருகிறார். 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்னாச்சு என்பது தான் உங்களிடம் நான் கேட்க விரும்பும் ஒரே ஒரு கேள்வி. ஒரு செங்கல்லை கூட வைக்கவில்லையே என்பது தான் நான் எழுப்பும் கேள்வி. பாஜவிடம் நான் அடிமையாக இல்லை என்று சொல்லும் பழனிசாமி, இந்த கேள்வியை மோடியிடம் கேட்பாரா. நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தீர்மானம் போட்டோம். பழனிசாமியால் விலக்கு பெற முடிந்ததா. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஏன் இந்த நாடகம் நடத்துகிறீர்கள் என்று பிரதமரிடம் கேட்க முடியுமா.

பழனிசாமி கொத்தடிமையாக இருக்க என்ன காரணம். தனது குடும்பத்தினருக்கும், பினாமிகளுக்கும் 3,000 கோடி ரூபாய் டெண்டர் கொடுத்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் பழனிசாமி. இவர் ஏதாவது கேட்டால், பாஜஅதை கையில் எடுக்கும். வருமான வரித்துறை, அமலாக்கத்துறையில் பல்வேறு வழக்குகளில் அமைச்சர்கள் சிக்கி இருக்கிறார்கள். அவர்களால் மத்திய அரசிடம் தலையாட்டி தான் வாழ முடியும். அப்படிப்பட்ட கொத்தடிமை அதிமுகவால் தமிழகத்துக்கு எந்த பெரிய நன்மையும் செய்ய முடியாது.

ஒரு சட்டமன்ற உறுப்பினர், ஒரு அமைச்சர், ஒரு முதலமைச்சர் செய்ய வேண்டிய குறைந்த பட்ச நன்மைகளை கூட ஆளுங்கட்சியினர் செய்யவில்லை என்பதற்கு உதாரணம் தான் நீங்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள். உங்கள் கவலைகளை, உங்களது கோரிக்கைகளை, உங்களது எதிர்பார்ப்புகளை, என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள். இவற்றை திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன். இவ்வாறு அவர் பேசினார். நாகை மாவட்டம்: நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் பகுதியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’  நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சென்னை விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் கைகளை தூக்கி போஸ் கொடுத்துள்ளார்.

2 கைகளும் ஊழல் கைகள்தான். பிரதமர் ஊழல் கறை படிந்த கைகளையே உயர்த்தி காண்பித்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது, இவர்கள் செய்த தவறுகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று பிரதமர் ஒப்புக் கொள்கிறாரா?. அல்லது நான் சொல்வதைத்தான் இவர்கள் செய்கிறார்கள் என்று சொல்கிறாரா? என்பது தான் நான் கேட்கும் கேள்வி. தேர்தல் முடிந்ததும், இப்போது உள்ள அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக கூட இருக்கமாட்டார்கள். அதிமுகவின் கறை படிந்த கரங்களை தண்டிக்கும் தேர்தல்தான் வரக்கூடிய சட்டமன்ற தேர்தல். அப்போது திமுக ஆட்சி மலரும். உங்கள் கவலைகள் அனைத்தும் தீரும். இவ்வாறு அவர் பேசினார்.

* ஜெயலலிதா பெயரையே காலி செய்த பழனிசாமி
நாகை மாவட்டம் பிரதாபராமபுரத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஆட்சியில் இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில் 1100 என்கிற எண்ணுக்கு போன் பண்ணினால் குறைகள் அனைத்தும் தீரும் என்று பழனிசாமி சொல்கிறார்.
இந்தத் திட்டம் ஏற்கனவே ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம். அம்மா அழைப்பு மையம் என்ற இந்த திட்டத்தை 19.1.2016ல் தொடங்கி வைத்தார். இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. மீண்டும் முதலமைச்சர் சேவை என் திட்டம் என இப்போது அறிவித்துள்ளார்.

பழைய திட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தி இருந்தாலே, என்னிடம் இவ்வளவு கோரிக்கை மனுக்களும் வந்திருக்காது.இந்த அரசாங்கம் செயல்படவில்லை என்கிற காரணத்தால் தான், இத்தனை ஆயிரம் மக்கள் வந்து என்னிடம் மனுக்கள் கொடுக்கிறார்கள். அம்மா தொடங்கி வைத்த திட்டத்தை சேவை திட்டம் என்று வைத்துள்ளார். அம்மா பெயரையே காலி பண்ணப்பார்க்கிறார். முதலில் சின்னம்மா காலை வாரிய பழனிசாமி, அம்மா பெயரை காலி பண்ண பார்க்கிறார். நம்பிக்கை துரோகமே உன்னுடைய பெயர் தான் பழனிசாமியா? என்றார்.

Tags : rulers ,AIADMK ,Tamil Nadu ,commission ,MK Stalin , AIADMK rulers have made Tamil Nadu indebted to the tune of Rs 5 lakh crore by beating the commission: MK Stalin's accusation
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி...