×

தண்ணீரைச் சேமிக்க நம்மால் இயன்றதை செய்ய வேண்டும் இந்தியாவின் பீரங்கி உற்பத்தி மையமாக தமிழகம் உருவெடுத்து வருகிறது: அவ்வையார், பாரதி பாடல்களை மேற்கோள் காட்டி பிரதமர் பேச்சு

சென்னை: தண்ணீரைச் சேமிக்க நம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என்று ஒளவையார் மற்றும் பாரதி பாடல்களை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஆவடியில் தயாரான அர்ஜுன் எம்பிடி எம்கே ரக கவச வாகனத்தை பிரதமர் மோடி ராணுவத்துக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 636 கிலோ மீட்டர் தூர கல்லணைக் கால்வாய்க்கு அடிக்கல் நாட்டப்படுகிறது என்பதால், இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பானது. 2.27 லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்கான  பாசன வசதியை இது முன்னேற்றும். இதன் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் சிறப்பாகப் பயனடையும். உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காகவும், நீர் ஆதாரங்களை சிறந்த முறையில் பயன்படுத்தியதற்காகவும், தமிழக விவசாயிகளை நான் பாராட்ட விரும்புகிறேன். தமிழ்ப் புலவர் அவ்வையாரின் வரிகளான, “வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்..” என்பதைக் குறிப்பிட வேண்டும்.  

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் மேலும் 9 கி.மீ தூரப் பிரிவை தொடங்கி வைப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியளிப்பதாகும். சென்னை கடற்கரை- எண்ணூர் - அத்திப்பட்டு பிரிவின் 4-ம் வழித்தடம் துவக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்துக்கும், காமராஜர் துறைமுகத்துக்கும் இடையே விரைவான சரக்குப் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் புல்வாமா தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம். நமது பாதுகாப்பு படையினர் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். மகாகவி சுப்பிரமணிய பாரதி “ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்றார்.

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள அர்ஜூன் முதல் ரக போர் ஊர்தி மார்க் 1ஏவை ஒப்படைப்பதில் நான் பெருமையடைகிறேன். இது உள்நாட்டு வெடி பொருட்களைப் பயன்படுத்தக்கூடியதாகும். தமிழகம் ஏற்கனவே, வாகன உற்பத்தியின் மையமாகத் திகழ்கிறது. இப்போது, தமிழகம் இந்தியாவின் பீரங்கி உற்பத்தி மையமாகவும் உருவெடுத்து வருவதை நான் காண்கிறேன். சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகம், 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையங்களை உள்ளடக்கியதாக இருக்கும். வெகு விரைவில், சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகம், புதுமைப் படைப்பதில் முன்னணி மையமாக உருவெடுக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தியா முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அது உருவாக்கும்.

இலங்கை தலைவர்களிடம் தமிழர்களின் உரிமைகள் பற்றி நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய எப்போதும் உறுதி பூண்டுள்ளோம்.  நமது மீனவர்கள் நீண்ட கால பிரச்னையை சந்தித்து வருகின்றனர். இதன் வரலாற்றுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. ஆனால், அவர்களது உரிமை நலன்களை எனது அரசு எப்போதும் பாதுகாக்கும் என்று உறுதியளிக்கிறேன். இலங்கையில் மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போதெல்லாம், அவர்களை விரைவாக விடுதலை செய்வதை உறுதிப்படுத்தியுள்ளோம். 1600க்கும் மேற்பட்ட மீனவர்கள் எனது ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இலங்கையின் பிடியில் எந்த இந்திய மீனவரும் இல்லை. இதேபோல, 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய படகுகளை மீட்டுக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். இலங்கையின் பிடியில் இப்போது எந்த இந்திய மீனவரும் இல்லை.

Tags : artillery manufacturing hub ,Tamil Nadu ,India ,Bharati ,Avaiyar , We must do our best to save water Tamil Nadu is emerging as India's artillery hub: Avvaiyar, PM's speech quoting Bharati songs
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...