களை கட்டிய காதலர் தின கொண்டாட்டம் மெரினா, மாமல்லபுரத்தில் குவிந்த காதல் ஜோடிகள்: கடலில் குளித்து மகிழ்ந்தனர்

சென்னை: காதலர் தினத்தையொட்டி, சென்னை மெரினா, பெசன்ட் நகர் மற்றும் மாமல்லபுரத்தில் ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர். இதில், ஒருசிலர் கடலில் குளித்து மகிழ்ந்தனர். உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேப்போல், இந்த ஆண்டு காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காதலர்கள் சுற்றுலா தலங்கள், பார்க், பீச், சினிமா என சென்று காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது, கேக், புத்தாடை, ரோஜா மலர் என பரஸ்பரம் பறிமாரிக்கொண்டனர்.

இந்நிலையில், உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாக திகழும் மாமல்லபுரம், மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை பகுதிகளில் கடந்த ஆண்டைப்போல இந்த வருடமும் நேற்று ஏராளமான காதல் ஜோடிகள் வந்து காதலர் தினத்தை கொண்டாடினர். நேற்று காலை முதலே காதல் ஜோடிகள் வரத் தொடங்கினர். பின்னர், மதியம் ஏராளமான காதல் ஜோடிகள் பைக், கார், பஸ்களில் வர தொடங்கினார். சென்னை, தாம்பரம், உத்திரமேரூர், திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து அதிகமான காதல் ஜோடிகள் வந்தனர்.

அதேபோல மெரினா, பெசன்ட் நகருக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்தனர். மேலும் பலர் பல்லவர் கால சிற்பங்களை சுற்றி பார்த்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மெரினா கடற்கரையில் நின்றபடியும் சிலர் போட்டோ எடுத்துக் கொண்டனர். கடற்கரைக்கு செல்லும் வழியில் உள்ள கடைகளில் காதலர்கள் தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி காதலிக்கு பரிசளித்தனர். ஒருசில பெண்கள் தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாத வகையில் துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடி கடற்கரையில் காதலனுடன் ஜாலியாக சுற்றித் திரிந்தனர். மேலும், ஒருசில காதல் ஜோடிகள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

Related Stories:

>