×

சட்டப்பேரவை தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு: வருவாய்த்துறை, காவல்துறை களம் இறங்கியது

சட்டப்பேரவை தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த்துறையினருடன் இணைந்து காவல்துறை களம் இறங்கி உள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதற்கான தேதியை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. மேலும் தேர்தலுக்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. அதாவது, தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் விவிபேட் பயன்படுத்தப்படுவதால் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதற்கட்டமாக மாதிரி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அப்போது பழுதான இயந்திரங்கள் மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஊரக, நகர, பேரூராட்சிகள், மாநகராட்சி என அனைத்து பகுதிகளிலும் தனித்தனியாக பதற்றமான வாக்குச்சாவடி மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடி பட்டியலை வருவாய்த்துறை மற்றும் காவல்துறை இணைந்து பட்டியல் தயாரித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அதில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என தனித்தனியாக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: பதற்றம் மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் பட்டியலை வருவாய்த்துறை, காவல்துறை ஆகிய 2 துறைகள் இணைந்து தயாரித்து வருகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் அந்தந்த விஏஓக்கள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள், காவல்துறை சார்பில் அந்தந்த காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு போலீசார் மற்றும் எஸ்பிசிஐடி உளவுப்பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் தேர்தலின்போது ஏற்பட்ட கலவர சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்கள் பரிந்துரையின்பேரில் இதற்கான அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். வாக்குப்பதிவு அன்று அசம்பாவிதங்களை தடுக்க மத்திய துணை ராணுவத்தினர் மற்றும் தமிழக அதிரடி போலீசாரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு பணிக்கு எவ்வளவு போலீசார் தேவை என்பது குறித்து தேர்தல் ஆணையம் பின்னர் அறிவிக்கும்.

* ஏரியா தாண்டாதீங்க...
பா.ஜனதா சார்பில் தற்போது மண்டல மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாநில தலைவர் முருகன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதில் பேசிவரும் முருகன், யாராக இருந்தாலும், அவரவர் பூத்தில் அமைந்துள்ள பகுதியில் மட்டும் மக்களை தினசரி சந்தித்து, குறைகளை கேட்டு அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பணியாற்றினால் போதும். மற்ற பணிகளை கட்சி மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கவனித்து கொள்வார்கள். கட்சி முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களின் தனிப்பட்ட வேலைகளை செய்யவும் தேவையில்லை. உண்மையாக உழைப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு பதவிகள் தேடி வரும். சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற இடைத் தேர்தலில் எந்தெந்த பூத்துகளில் வாக்குகள் குறைகிறதோ, அந்த நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கைகள் பாயும். எனவே பூத் கமிட்டி நிர்வாகிகள் ஏரியா தாண்டாமல் உங்கள் பகுதிகளில் கவனம் செலுத்துங்கள் என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.


Tags : run-up ,elections ,Assembly , Tension polls in the run-up to the Assembly elections: Revenue, Police field landed
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா