தஞ்சை சுற்றுலா மாளிகையில் சசிகலாவின் உறவினருடன் வைத்திலிங்கம் ரகசிய சந்திப்பு: அதிமுகவினர் அதிர்ச்சி

தஞ்சை சுற்றுலா மாளிகையில் சசிகலாவின் உறவினரை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். இந்த தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து கடந்த 8ம் தேதி சசிகலா சென்னை திரும்பினார். அவரை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சந்தித்து வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் அவரை இதுவரை சந்திக்கவில்லை. அதேநேரம் அவர் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரிடம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எம்பியுமான வைத்திலிங்கம் சசிகலா உறவினரை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். இதுபற்றி கூறப்படுவதாவது: தஞ்சை சுற்றுலா மாளிகை பக்கம் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே 2 நாட்களுக்கு முன் சசிகலா கணவர் நடராஜனின் அக்கா வனரோஜா மகன் தனசேகரன் காரில் காத்திருந்துள்ளார். அப்போது வைத்திலிங்கத்திடமிருந்து அழைப்பு வந்த சில நிமிடங்களில் இவரது கார் சுற்றுலா மாளிகை உள்ளே சென்றது. மாடியில் தனி அறையில் காத்திருந்த வைத்திலிங்கம், தனசேகரனுடன் 10 நிமிடத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது தனசேகரன் கையில் பைல் ஒன்றை எடுத்து சென்று வைத்திலிங்கத்திடம் காண்பித்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகவல் அதிமுகவின் மேல்மட்ட நிர்வாகிகள் மற்றும் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சசிகலாவிற்கு எதிராக பேசி வரும் நிலையில் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சசிகலா குறித்து வாயே திறப்பதில்லை. சமீபத்தில் தஞ்சையில் நடந்த சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வைத்திலிங்கத்திடம் 2 முறை சசிகலா பற்றி நிருபர்கள் பேட்டி கேட்டதற்கு கையெடுத்து கும்பிட்டுவிட்டு நழுவி விட்டார். சசிகலா சிறையில் இருந்த போது, அவரை பற்றி காரசாரமாக பேசிய வைத்திலிங்கம் தற்போது அமைதியாக இருப்பது அதிமுகவினர் மத்தியில் பல்வேறு ஊகங்களை உலவ விட்டுள்ளது. சசிகலாவிடம் அனுமதி பெற்றே தனசேகரன், வைத்திலிங்கத்தை சந்தித்ததாகவும், எப்படியாவது வைத்தியலிங்கத்தை தங்கள் பக்கம் இழுத்து டெல்டாவிலிருந்து தங்கள் அரசியல் காய்களை நகர்த்த சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

* வேலைவாய்ப்பில் கோட்டைவிட்ட அரசால் பரிதவிக்கும் இளைஞர்கள்: கோபாலகிருஷ்ணன் சிவில் இன்ஜினியர், பெரம்பூர்

தமிழகத்தில் கடந்த 10 வருடங்களாக இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகளை இந்த மாநில அரசு உருவாக்கவில்லை. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்திருக்கின்றனர். கல்வி கற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க தவறியது யார் குற்றம். வெளிநாட்டிலிருந்து தொழில் முனைவோர் வருகிறார்கள் என்று கூறி பல கோடி செலவு செய்து மாநாடுகளை நடத்தி அதன் மூலம் இவ்வளவு முதலீடுகள் வந்தது என்று விளம்பரம் செய்யும் அரசு கடைசிவரை இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க தவறிவிட்டது.

ஆனால் இதுவரை தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் கூறுவது வடிகட்டிய பொய் என்பது ஊர்ஜிதமாகிறது. மேலும் தமிழகத்தில் என்னைப் போன்று பொறியியல் படித்த பலர் தற்போது வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். சுயமாக தொழில் தொடங்க சென்றாலும் வங்கிகளில் சிபாரிசுகள் இன்றி கடன் வாங்க முடிவதில்லை. இவ்வாறு ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தையும் இந்த அரசு வாட்டி வதைத்து வருகிறது. எனவே இதற்கெல்லாம் தீர்வு காண ஒரு நல்ல அரசை வருங்காலத்தில் மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பதே சராசரி இளைஞனின் கனவாக உள்ளது.

Related Stories: