×

கன்னியாகுமரிக்கு பொதுத்தேர்தலும்... இடைத்தேர்தலும்...

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் சேர்த்தே தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. நாட்டின் கடைகோடி மக்களவை தொகுதி, 100 சதவீதம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம், 2008ம் ஆண்டு நடந்த மறு சீரமைப்புக்கு முன்னர் வரை ‘நாகர்கோவில்’ என்ற பெயருடன் விளங்கி வந்தது, இப்போது ‘கன்னியாகுமரி’ மக்களவை தொகுதி. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் என்று ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கிய தொகுதியில் சிறுபான்மை வாக்காளர்கள் சரி சமமாக உள்ளனர். இதனால் வெற்றி வேட்பாளர்களை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகவும் சிறுபான்மையினர் வாக்குவங்கி அமைந்துவிடுகிறது. கேரளாவையொட்டிய தொகுதி என்பதாலோ தேசிய நீரோட்டத்துடன் இணைந்தே தொகுதியின் தேர்தல் முடிவுகள் இருந்திருக்கின்றன. 2009ல் மட்டும் ஒரு முறை இ்ங்கு திமுக வெற்றிபெற்றுள்ளது.

கடந்த 2014ல் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் 3,72,906 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 2,44,244 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை தக்க வைத்தார். அதிமுகவின் ஜான் தங்கம் 1,76,239 வாக்குகளும், திமுகவின் ராஜரத்தினம் 1,17,933 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றனர். மற்றொரு பலம் பொருந்திய கட்சியான மார்க்சிஸ்ட் 35,284 வாக்குளை மட்டுமே பெற்றிருந்தது. கடந்த 2019ல் இந்த கட்சிகள் இரு அணிகளாக மாறி தேர்தலை சந்தித்தன. பாஜ சார்பில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் மீண்டும் வசந்தகுமாரும் தேர்தலை சந்தித்தனர்.

‘கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மத்திய மோடி அரசால் ரூ.40 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை கொண்டுவந்தேன், தேர்தல் முடிந்த பின்னர் துறைமுகம், பாலங்கள் போன்றவற்றுக்கு பணிகள் தொடங்கும்’ என்று பா.ஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம் செய்தார். ஆனால் அவர் ‘கடந்த தேர்தலின்போது அறிவித்த ஏழை இந்து மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பற்றி இப்போது வாய் திறப்பது இல்லை, விமான நிலையம், சாய் சப் சென்டர் என்று அவரது தேர்தல் கால வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. ஒரு தரப்பு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையிலும் மத்திய அரசால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாமலேயே துறைமுக திட்டத்திற்கு கம்பெனியை தொடங்கியுள்ளார்’ என்பது காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் குற்றச்சாட்டாக இருந்தது.

இரு முனை போட்டி உச்சம் பெற்ற நிலையில் 6 லட்சத்து 27 ஆயிரத்து 235 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் வெற்றிபெற்றார். பா.ஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 67 ஆயிரத்து 302 வாக்குகளை பெற்றிருந்தார். மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 933 வாக்குகள் வித்தியாசத்தில் எச்.வசந்தகுமார் வெற்றிபெற்றிருந்தார். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வசந்தகுமார் எம்.பி உடல்நலக்குறைவால் காலமானார். அதன் பின்னர் 5 மாதங்களுக்கு மேலாக தொகுதி காலியாகவே உள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அது எந்த வகையிலும் பொதுத்தேர்தலை பாதித்துவிடக்கூடாது என்பதில் ஆளும்தரப்பு கண்ணும் கருத்துமாக இருந்ததில் காலம் கடந்துவிட்டது. வரும்  சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் சேர்த்து தேர்தல்  நடக்கும் என்ற எதிர்பார்ப்பு குமரி மாவட்ட வாக்காளர்களிடம் உள்ளது. அதற்கேற்ப அதிகாரிகளும் தேர்தல் பணிகளில் தயார் நிலையில் உள்ளனர். கூட்டணிகள் இறுதி செய்யப்படாத வேளையில் கன்னியாகுமரியில் களம் காணப்போகும்  வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

Tags : Kanyakumari ,election , Kanyakumari general election ... by-election ...
× RELATED கன்னியாகுமரி, விளவங்கோடு தேர்தல்கள்...