×

பாசனத்திற்கு தண்ணீரில்லை... பிழைப்பை பார்க்க வழியுமில்லை...! மேலூர் தொகுதி எம்எல்ஏ பெரியபுள்ளான் (எ) செல்வம்

தமிழகத்தில் அதிகளவு கிரானைட் கற்களை தந்து அரசுக்கு வருவாய் ஈட்டிய தொகுதி மதுரை மாவட்டம், மேலூர் தொகுதி ஆகும். தற்போது அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக கூறி கிரானைட் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்களை பெற்றபோதும், மேலூர் தொகுதிக்கு தொழில் வளர்ச்சிக்கு என எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. இத்தொகுதியில் கிரானைட் குவாரி மற்றும் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. கிரானைட் குவாரிகள் மூடப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்த இத்தொகுதி மக்களுக்கு, மாற்று வேலைக்கு எந்த நடவடிக்கையும் அதிமுக எம்எல்ஏ பெரியபுள்ளான் செய்யவில்லை.

அதேபோல் ஒரு போக பாசன கடைமடை பகுதியான மேலூருக்கு, பெரியாறு அணையில் இருந்து போதிய அளவு தண்ணீர் கிடைப்பது இல்லை. தண்ணீர் கேட்டு நான்கு வழிச்சாலையில் பந்தல் அமைத்து இப்பகுதி விவசாயிகள் போராடிய நிலைதான் உள்ளது. இதற்காக எம்எல்ஏ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மூடிக்கிடக்கும் மில்கேட்டில் உள்ள நூற்பாலையை திறப்பதாக தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதி காற்றில் விடப்பட்டது. நூற்பாலை அமைக்காவிட்டாலும் அந்த தொழிற்பேட்டை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. ‘‘அதிமுகவை தொடர்ந்து ஜெயிக்க வச்சோம்... ஆனால், எங்களுக்கு அவங்க எந்த கைமாறும் செய்யலை... இந்த முறை அவங்களுக்கு ஓட்டு போடுறதில்லைன்னு முடிவு பண்ணிட்டோம். ஓட்டு கேட்டு வரட்டும். அப்புறம் சொல்றோம்...’’ என்கின்றனர் தொகுதி மக்கள்.

* ‘தொகுதியில் அடிப்படை வசதிக்கே முன்னுரிமை’
மேலூர் அதிமுக எம்எல்ஏ பெரியபுள்ளான் (எ) செல்வம் கூறும்போது, ‘‘நான் எந்த தேர்தல் வாக்குறுதியும் கொடுத்து ஜெயிக்கவில்லை. எப்போதும் மக்களின் அடிப்படை வசதிகளுக்கே முன்னுரிமை அளிப்பேன். அதுபோலவே இந்த 5 ஆண்டுகளும் செய்துள்ளேன். விவசாயத்திற்கு என விநாயகபுரத்தில் குளிர்பதன கிடங்கு, திருவாதவூரில் நெல் கிட்டங்கி ஆகியவை ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு என எம்எல்ஏ நிதி மற்றும் நபார்டு நிதி மூலம் ரூ.20 கோடிக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி சாலைகள் ரூ.80 கோடிக்கு இதுவரை போடப்பட்டுள்ளது. இத்துடன் கொட்டாம்பட்டியில் புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம், மேலவளவில் போலீஸ் ஸ்டேஷன், நான்கு இடங்களில் துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்கிறார்.

* ‘முன்னேற்றமில்லை... பின்னோக்கி செல்கிறது’
மேலூர் நகர் திமுக செயலாளர் முகமது யாசின் கூறும்போது, ‘‘மேலூரில் தொழிற்பேட்டை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக அதிமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியது. அதுபோல் எதுவும் செய்யாமல் விட்டதால் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கை கெடுத்து, தங்கள் வாழ்வை தொலைத்து கொண்டுள்ளனர். 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட நூற்பாலையை மூடியவர்கள், அவ்விடத்தில் ஒரு தொழிற்பேட்டை உருவாக்கி இருக்கலாம். பல லட்ச ரூபாயில் நகருக்கு என அமைக்கப்பட்ட மின்மயானம் திறக்கப்படாமலேயே 3 வருடமாக உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கி, அதை அதே சாக்கடையில் போட்டு மூடிவிட்டார்கள். பல திட்டங்களை செயல்படுத்தி மேலூர் தொகுதியை முன்னேற்றுவதாக கூறிய அதிமுக தற்போது தொகுதியை பின்னோக்கியே கொண்டு சென்றுள்ளது’’ என்கிறார்.

* திடீர், திடீர்னு இப்படி ரூல்ஸ மாத்துனா என்ன அர்த்தம் ஆபீசர்?
தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னரே, தமிழகத்துல அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துட்டு வருது. கொரோனா கட்டுப்பாடு காரணமா 1,000 வாக்காளர்களுக்கு ஒன்று என்ற அடிப்படையில வாக்குச்சாவடிய மாத்திட்டு வந்தாங்க. இதனால பழைய வாக்குச்சாவடிய பிரிச்சு, துணை வாக்குச்சாவடி அமைக்கும் பணி தீவிரமா நடந்துட்டு வந்துச்சு. மாங்கனி மாவட்டத்துல இதுகுறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி பிரமுகர்கள வரச் சொன்னாங்க. அவங்களும் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, 1,000 பேருக்கு ஒண்ணுன்னு, பிரிக்க வேண்டிய வாக்குச்சாவடிகள் இதுவாதான் இருக்கும்னு, தங்கள்கட்சி ஆளுங்க மூலமா எடுத்த பட்டியலோட போனாங்க. ஆனா, கூட்டத்துல திடீர்னு 1,000 வாக்காளர்களுக்கு பதிலா, 1,050 பேருக்கு ஒரு வாக்குச்சாவடினு அதிகாரிங்க அறிவிச்சுட்டாங்க.

அத்தோட மாவட்டத்துல இருக்குற 11 தொகுதிக்கும், 4,280 வாக்குச்சாவடி ஏற்பாடு செஞ்சிருக்கறதா சொல்லிட்டாங்க. இதனால அதிர்ச்சியடைந்த கரைவேட்டிக்காரங்க, இதெல்லாம் முன்னதாகவே நீங்க சொல்லியிருக்கணும். திடீர், திடீர்னு இப்படி ரூல்ஸ மாத்துனா, நாங்க எப்படி தேர்தல் வேல பார்க்குறதுனு புலம்பியிருக்காங்க. மேலும், புதுசா சேர்ந்த வாக்காளர்களுக்கு, அவங்க எந்த தெருவுல இருக்காங்கனு பட்டியல்ல இல்லையாம். இப்படி இருந்தா எப்படி ஓட்டு கேட்டு போக முடியும்னு சலிச்சுக்கிட்டாங்க. ஒருவழியா அவங்கள சமாதானப்படுத்திய ஆபீசருங்க, இதுகுறித்து மேலிடத்துக்கு தகவல் சொல்றோம்னு  சொல்லி தப்பிச்சுட்டாங்களாம்.....

Tags : Melur Constituency ,Selvam ,MLA Periyapullan , No water for irrigation ... no way to see survival ...! Melur Constituency MLA Periyapullan (A) Selvam
× RELATED அநீதிக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி