×

‘இங்கு தேசிய கட்சிகளுக்கு இடமில்லை…’

- தமிழகம் போன்ற சில மாநிலங்களின்  தலைவர்கள் அடிக்கடி இந்த வசனத்தை சொல்வது வழக்கம். ஆனால், அசாமில் நிலைமை தலைகீழ். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, அசாமில் பெரும்பாலும் தேசிய கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்கின்றன. இம்மாநிலத்தை அதிகமாக ஆண்டது காங்கிரஸ்தான். இவற்றை எல்லாம் மீறி, மாநில கட்சியான அசாம் கன பரிஷத் 2 முறை போராடி ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த பெருமை நீண்ட நாள் நீடிக்கவில்லை. மத்தியில் அசுர பலமிக்க கட்சியாக பாஜ உருவெடுத்த பிறகு, அசாமையும் கடந்த தேர்தலில் கைப்பற்றியது. கூடவே, இதற்கு முன் ஆண்ட கட்சியான அசோம் கன பரிஷத்தை கூட்டணி கட்சியாக மாற்றி விட்டது. இதுபோல், 2ம் நிலை கட்சியாக மாறி விட்ட பிறகு, கன பரிஷத்தால் இனி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் கட்சியாக மாறுவது கண்ணுக்கெட்டும் தூரம் வரை சாத்தியமாக தெரியவில்லை. அதேபோல், மற்ற கட்சிகளும் மாற்று சக்தியாக உருவாவதற்கான அறிகுறிகளும் இல்லை.

* மார்பில் முட்டிய வளர்த்த கிடா
கேரளாவில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இடதுசாரி கூட்டணியில் உள்ளது. இக்கட்சி சார்பில் பாலா தொகுதி எம்எல்ஏ,வாக மாணி  சி.காப்பன் உள்ளார். வரும் தேர்தலில் இதே தொகுதியில் இவர் போட்டியிட விரும்பினார். ஆனால்,  சமீபத்தில் தனது கூட்டணியில் இணைந்த கேரளா காங்கிரஸ் (எம்) பிரிவுக்கு இத்தொகுதியை கொடுக்க இடதுசாரி கூட்டணி முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணி சி.காப்பன், ‘தேசியவாத காங்கிரஸ் (கேரளா)’  என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளார். புதிய கட்சியை தொடங்கியதும், காங்கிரஸ் கூட்டணியில் இவர் சேர உள்ளார். இதனால், வளர்த்த கிடா மார்பில் முட்டுகிறது என புலம்புகின்றன தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர்கள்.

* ஹாட்ரிக் வெற்றிக்கு மும்மூர்த்திகள் முட்டுக்கட்டை
கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு வங்கியான 27 சதவீதமும் பாஜ.வுக்கு போய் விட்டது. ஆனால், முதல்வர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசின் வழக்கமான ஓட்டு வங்கியான 44 சதவீத வாக்குகள், இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இந்த வாக்கு வங்கியுடன் பொது வாக்குகளும் அதிகம் கிடைத்தால், மம்தா கட்சி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுவது உறுதி என்றனர் அரசியல் நிபுணர்கள். வெற்றிக்கு வித்திடப் போகும் அந்த பொதுவாக்கு வங்கி என்பது வெறும் 2 சதவீதம்தான். இது, மம்தாவுக்கு கிடைத்து விடாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் பாஜ.வின் இப்போதைய ஒரே குறிக்கோள். அதற்காகவே, பாஜ தலைவரான ஜேபி.நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மேற்கு வங்கத்தில் அடிக்கடி பிரசாரம் செய்கின்றனர். தேர்தல் நெருங்கி விட்டதால், இப்போது இவர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடியும் களத்தில் குதித்து விட்டார். இனி, இந்த மும்மூர்த்திகளால் மேற்கு வங்கம் ரனகளமாகப் போவது உறுதி.

* பாஜ. ஆதிக்கம் அதிமுக கலக்கம்
புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது பாஜ. இதில், அதிமுக.வும் இடம் பெற்றுள்ளது. ஆனால், தொகுதி பங்கீடு பற்றி என்ஆர் காங்கிரசும், பாஜ.வும் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துகின்றன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 20ல் போட்டியிட ரங்கசாமி விரும்புகிறார். மீதம் இருப்பது 10 மட்டுமே. புதுவையிலும் காலூன்ற நினைக்கும் பாஜ., இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட நினைக்கிறது. இதன் காரணமாக தொகுதி பங்கீடு பேச்சில் இழுபறி நீடிக்கின்றன. கடந்த தேர்தலில் அதிமுக இங்கு 10ல் போட்டியிட்டு, 4ல் வெற்றி பெற்றது. இதனால், இந்த தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி விரும்புகிறது. ஆனால், அதிக தொகுதிகளை பாஜ கேட்பதால், அதிமுக.வுக்கு கேட்டது கிடைக்காது என்ற கலக்கத்தில் உள்ளனர் புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள்.

Tags : parties , ‘There is no place for national parties here’
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...