×

கூட்டுறவுத்துறையில் கூட்டுக்கொள்ளையை தடுக்க வேண்டும்: தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் சங்க இணை செயலாளர் ஏ.பி.ஜெயச்சந்திரன் (ஓய்வு)

கூட்டுறவுத்துறை கடந்த 1906ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த துறை சட்டங்கள் எல்லாமே வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது தான். இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தான் சிக்கல் உள்ளது. மக்களுக்கு பயன்படக்கூடிய சட்டத்தை அதிகாரிகள் அரசியல் வாதிகள், ஆட்சியாளர்கள் ஆதாயத்திற்காக அவர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி விட்டனர். இந்த விஷயம் தான் மாற வேண்டும். தமிழகத்தில் ஊழல் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். அதில் அதிக ஊழல் உள்ள துறை கூட்டுறவுத்துறை. இந்த துறையின் கூட்டுறவு தத்துவத்தை தலைகீழாக மாற்றியுள்ளனர். அவர்கள் தங்களது சொந்த நலனுக்காக கொள்ளையடித்து வருகின்றனர்.

இந்த துறையின் கீழ் செயல்படும் வங்கிகள் மற்ற தேசிய வங்கிகளை ஒப்பிடுகையில் பொதுமக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இந்த வங்கியில் பெரும்பாலும் ஏழை எளிய நடுத்தர மக்கள் தான் கணக்கு வைத்துள்ளனர். பெரும்பாலும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான் உள்ளனர். அவர்கள் வைக்கும் வைப்பு நிதியை வைத்து தான் பயிர் சம்பந்தப்பட்ட கடன் வழங்குகின்றனர். இந்த குறைந்த வட்டி கடன் அரசின் பரந்த நோக்கத்தை முன்வைத்து தான் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த கடன் வழங்குவதில் உள்ள நடைமுறையில் தான் குறையே இருக்கிறது.

அரசு அதிகாரிகள், அரசு பிரதிநிதிகளால் தான் குறையே உள்ளது. இந்த பயிர் கடன் விவசாயிகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. பயிர்கடன் போர்வையில் உள்ளூர் அரசியல்வாதிகள் தலையீட்டில் அவர்களது தொண்டர்களுக்கு, அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு, சேவகம் செய்தவர்களுக்கு தான் சேருகிறது. அதற்கு மேலும் பொதுமக்கள் பயிர்க்கடன் வாங்குகிறார்கள் என்றால் அந்த கடன் வாங்க லஞ்சம் தர வேண்டும். லஞ்சம் கொடுப்பவர்களுக்கு தான் பயிர்க்கடன் தருகிறது.
 கடன் என்பது திருப்பி தர வேண்டியது. ஆனால், கூட்டுறவு வங்களில் ஆளும் கட்சியினருக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், லஞ்சம் கொடுப்பவர்களுக்கு தரப்படும் கடன் திரும்பி வருமா என்றால் 99 சதவீதம் வரை வராது.

திரும்பி கடன் வராத போது அந்த அமைப்பு, அந்த வங்கி நஷ்டத்தில் தான் செல்லும். இதனால், அடுத்த ஆண்டு அந்த வங்கி எங்கிருந்து கடன் கொடுப்பார்கள். சட்டியில் இல்லாமல் அகப்பையில் எப்படி வரும். அப்படி தான் கூட்டுறவு வங்கிகள் நஷ்டத்தில் செயல்பட்டு கடைசி நேரத்தில் மூடும் நிலைக்கு தள்ளப்படுகிறது. நல்ல விவசாயிக்கு கடன் கொடுத்து, அந்த விவசாயி பயிர் செய்து ஒரு ஆயிரம் மூட்டை நெல்லை அறுத்து, அதை வெளியில் வந்து விற்கும் போது பொருளாதாரம் உயரும். அவரின் குடும்பத்தின் பொருளாதாரம் உயரும். வங்கிகளுக்கு கடனாக சென்ற தொகை வட்டியுடன் திரும்ப வரும். அப்போது வங்கியும் வளம் பெறும்.

ஒவ்வொரு விவசாயிக்கு கொடுக்கும் போது நாட்டின் பொருளாதாரம் எங்கேயோ சென்று விடும். எல்லாமே ஏறுமுகத்தில் தான் செல்லும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தொடங்கப்பட்ட இந்த வங்கிகள் அதிகாரிகள், அரசியல் வாதிகளால் சரியாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை உள்ளது. வங்கியில் உள்ள கடனை தள்ளுபடி செய்ய அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது. வங்கி அரசாங்கத்தின் ஒரு பகுதி தான். அரசாங்கம், நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் என்று சொல்லும். இந்த கடனை அரசாங்கம் வங்கிக்கு கொடுக்கும்.

இது தான் நடைமுறை. ஆனால், வங்கிக்கு இப்படி அரசாங்கம் பணத்தை தருகிறதா என்று தெரியவில்லை. அந்த பணத்தை திருப்பி தந்தால் தான் வங்கி வளரும். ஒரு வேளை வங்கிக்கு பணம் கொடுத்தால் ஒரு பக்கம் தள்ளுபடி செய்த பணத்தை ஈடுகட்ட வரி என்கிற பெயரில் மாநில அரசு மீண்டும் ஒரு சுமையை மக்கள் மீது திணிப்பார்கள். அப்படி தான் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறவில்லை. ஆனால், இங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல் விலையை விட அவர்கள் போடும் வரி அதிகமாக உள்ளது. இந்த வரி ஏன் போட்டனர்.

இது போன்று தள்ளுபடி, மானியம் போன்ற காரணத்தை காட்டி நமது தலையில் சுமையை தூக்கி வைக்கின்றனர். கூட்டுறவு வங்கிகள் லாபத்தில் இயங்க வேண்டும் என்றால், நேர்மையான ஆட்சி உருவாக வேண்டும். நேர்மையான அதிகாரிகள் உருவாக வேண்டும். சட்டத்தில் எந்த ஓட்டையும் கிடையாது. ஆனால், இந்த சட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள், அரசியல் வாதிகள் தான் மாற வேண்டும். டென்மார்க், புல் விளையக்கூடிய நாடு. இந்த புல் முளைக்கிற நாட்டை அதற்கேற்றாற்போல் ஆட்சியாளர்கள் வளர்ந்த நாடாக மாற்றி விட்டனர்.

அவர்கள், டென்மார்க்கில் அதிகமான மாடுகளை வளர்த்து பாலை உற்பத்தி செய்து, பால் பண்ணையை ஏற்படுத்தி அந்த நாட்டை வளர்ச்சி நாடாக மாற்றியுள்ளனர். இந்தநாடு தான் பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. அதே போன்று பாலைவனமாக உள்ள அரேபிய நாடும் அரசாங்கத்தாலும், அதிகாரிகளும் தான் வளர்ந்த நாடாக காரணம். வளமான நாட்டையும், வளரும் நாடாக மாறி போனதற்கு நமது நாட்டை சொல்லலாம். மற்றவர்களை நாம் குறை சொல்லக்கூடாது. முதலில் மக்கள் மாற வேண்டும். அவர்கள் ஆட்சியாளர்கள், அதிகாரிகளை மாற்ற வேண்டும்.

அரசியல்வாதிகளையோ, அரசாங்கத்தையோ குறை சொல்லி எந்தவித பயனும் இல்லை. மக்கள் தான் எல்லாவற்றையும் மாற்ற வேணடும். கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடனை ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்துள்ளது. இதில், 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. வாக்காளர்களை கவர்வதற்காக மறைமுக லஞ்சம் கொடுப்பது போன்று தான் இந்த கூட்றவு வங்கி பயிர் கடன் தள்ளுபடி என்கிற அறிவிப்பு. ‘நான் 110 விதிகளில் சொல்லி விட்டேன். எனவே, நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்’ என்கிறார்கள். அதற்காகவே  இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

சட்டியில் ஒன்றுமே இல்லை. எப்படி தள்ளுபடி செய்தனர் என்று புரியவில்லை. ஏற்கனவே, தமிழக அரசு பல லட்சம் கோடி கடனில் உள்ளது. இந்த சூழலில் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்துள்ளனர்.
 இதன் மூலம் அரசு கடும் நிதி நெருக்கடியில் மேலும் சிக்க வாய்ப்புள்ளது. ஆளும் கட்சி நிர்வாகிகளுக்காக தான் இந்த கடனை தள்ளுபடி செய்கின்றனர். அவர்கள் கட்சிக்காரர்கள், உறவினர்கள் இந்த தள்ளுபடியால் பயனடைகின்றனர். மேலும், அவர்களிடம் ஆசையை காட்டி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தான், இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.


Tags : Co-operatives ,AB Jayachandran ,Co-operative Bank Officers' Association ,Tamil Nadu ,Retd , Co-operatives should be prevented from looting: AB Jayachandran, Joint Secretary, Tamil Nadu Chief Co-operative Bank Officers' Association (Retired)
× RELATED 9 கூட்டுறவு, ஒரு பொதுத்துறை சர்க்கரை...