×

தொடர்ந்து உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல், காஸ் விலை இனி தாங்க முடியுமா? அனைத்து தரப்பு மக்களும் திணறல்; வரியை தீட்டுவதில் போட்டிபோடும் மத்திய, மாநில அரசுகள்

பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100  ரூபாயை எட்டிவிடும் என அஞ்சப்படுகிறது. இதனால், விவசாயம், தொழில்துறை தொடங்கி பெரும்பாலான தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. தொழில்துறைகளை பொறுத்தவரை மின்சாரத்தை மட்டும் நம்பி இயக்க முடியாது. காரணம், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரத்தில் தன்னிறைவு இல்லை. இதனால், உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஜெனரேட்டர்களை வைத்துள்ளனர். இதற்கு டீசல் பயன்படுத்தப்படுகிறது. டீசல் விலையேற்றம் இந்த துறையினரை நேரடியாகவே பாதிக்கிறது.

கொரோனா ஊரடங்கால் மிகக்கடுமையான பாதிப்பை சந்தித்த குறு, சிறு தொழில்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தொழில்துறை உற்பத்தி, சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் உயர்வதால், மூலப்பொருட்கள் விலை உயர்ந்து இவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோல்தான் விவசாயத்துறையும். டிராக்டர் உட்பட பல விவசாய பணிகளுக்கு இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு டீசல் தேவை மிக அவசியம். எனவே, நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்துறை, எரிபொருள் விலையேற்றதால் மிகுந்த பாதிப்பை அடைகிறது. இதுமட்டுமின்றி பஸ் போக்குவரத்து உட்பட வாகன போக்குவரத்து கட்டணங்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, காய்கறி தொடங்கி அனைத்து பொருட்களின் விலையும் உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளன. இதன் காரணமாக, மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. பிரண்ட் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 62 டாலரை தாண்டி விட்டது. இதை காரணம் காட்டித்தான் எண்ணெய் நிறுவனங்கள் தினமும் விலையை உயர்த்தி வருகின்றன.

போதாக்குறைக்கு கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தின. இது விற்பனையில் எதிரொலிக்காது என கூறப்பட்டாலும், இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்திய வண்ணம் உள்ளன. மத்திய பட்ஜெட்டில், விவசாய செஸ் வரியாக பெட்ரோலுக்கு ரூ.2.5 சதவீதம், டீசலுக்கு 4 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்தது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சிமேல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய, மாநில அரசுகள் வரியை குறைத்தால் மட்டுமே விலையை கட்டுப்படுத்துவது சாத்தியம் என எண்ணெய் நிறுவனங்கள் கூறிவிட்டன. ஆனால், வரியை குறைக்கும் திட்டமே இல்லை என மத்திய அரசு கைவிரித்து விட்டது. மாநில அரசும் வரி குறைப்பை பற்றி வாய் திறக்கவே இல்லை. இதுகுறித்த நான்கு கோண அலசல்:

Tags : state governments , Can rising petrol, diesel and gas prices continue? Stagnation of people on all sides; Federal and state governments competing in taxation
× RELATED தமிழக மீனவர்களின் சிக்கலுக்கு...