போதையில் பெட்ரோல் ஊற்றி விளையாட்டு மாநகராட்சி ஊழியர் தீயில் எரிந்து சாவு: சக ஊழியர்கள் 3 பேர் கைது

சென்னை: தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் பாபு (22). சென்னை மாநகராட்சியில் நாய் பிடிக்கு ஊழியராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த மாதம் 26ம் தேதி மெரினாவில் நடந்த குடியரசு தின விழாவில், தெரு நாய்கள் இடையூறு செய்வதை தடுக்க, மெரினா பகுதியில் சுற்றித்திரிந்த நாய்களை, சக ஊழியர்கள் 5 பேருடன் சேர்ந்து பிடித்து சென்றுள்ளார். வேலை முடிந்த பிறகு ஐஸ்அவுஸ் லாயிட்ஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டில் பாபு, சக ஊழியர்களான சுப்பிரமணியன் (32), சார்லஸ் (28), விக்னேஷ் (24) உட்பட 5 பேருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது மது போதையில் நண்பர்கள் அங்கிருந்த பெட்ரோலை எடுத்து விளையாட்டாக ஒருவர் மீது ஒருவர் ஊற்றி உள்ளனர். அப்போது பாபு சிகரெட் பிடித்திருந்ததால், உடலில் தீப்பற்றியது.

அக்கம் பக்கத்தினர், பாபுவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாபு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் கடந்த வாரம் தீக்காயத்தில் ஏற்பட்ட பாதிப்பால் கடுமையாக உடல் நலக்குறைவு எற்பட்டது. உடனே அவரது உறவினகர்கள் பாபுவை மீண்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஐஸ்அவுஸ் போலீசார் மாநகராட்சி ஊழியர் பாபு இறக்க காரணமான சக ஊழியர்களான 5 பேர் மீது ஐபிசி 304 பிரிவில் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியன், சார்லஸ், விக்னேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>