×

முதல் இன்னிங்சில் திணறல் 134 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து: வலுவான நிலையில் இந்தியா

சென்னை: இந்திய அணியுடனான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில், அஷ்வினின் துல்லியமான சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி 134 ரன்னுக்கு சுருண்டது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன் எடுத்திருந்தது. ரோகித் 161, புஜாரா 21, ரகானே 67 ரன் எடுத்தனர். பன்ட் 33, அக்சர் 5 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். அக்சர் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, அடுத்து வந்த இஷாந்த், குல்தீப் இருவரும் பரிதாபமாக டக் அவுட்டாகினர்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய பன்ட் அரை சதத்தை நிறைவு செய்தார். சிராஜ் 4 ரன் எடுத்து ஸ்டோன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் போக்ஸ் வசம் பிடிபட, இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பன்ட் 58 ரன்னுடன் (77 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் மொயீன் அலி 4, ஸ்டோன் 3, ஜாக் லீச் 2, ரூட் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

முதல் ஓவரிலேயே பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் இஷாந்த் வேகத்தில் எல்பிடபுள்யு ஆகி வெளியேற, இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. சிப்லி 16 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் பலியாக, கேப்டன் ரூட் 6 ரன் எடுத்து அறிமுக சுழல் அக்சர் பந்துவீச்சில் அஷ்வினிடம் பிடிபட்டார். லாரன்ஸ் 9, ஸ்டோக்ஸ் 18 ரன் எடுத்து அஷ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து 23.2 ஓவரில் 52 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. போப் - போக்ஸ் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்தனர். போப் 22 ரன் எடுத்து சிராஜ் வேகத்தில் பன்ட் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மொயீன் 6, ஸ்டோன் 1, லீச் 5 ரன்னில் அணிவகுக்க, ஸ்டூவர்ட் பிராடு டக் அவுட்டானார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 134 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (59.5 ஓவர்). போக்ஸ் 42 ரன்னுடன் (107 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 5, இஷாந்த், அக்சர் தலா 2, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 195 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன் எடுத்துள்ளது. கில் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித் 25, புஜாரா 7 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 9 விக்கெட் இருக்க, இந்தியா 249 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் இங்கிலாந்து அணி கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 15 விக்கெட் சரிந்த நிலையில், இன்று பரபரப்பான 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Tags : England ,innings , England were bowled out for 134 in the first innings
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...