×

அவ்வையார் பாடலை பிரதமர் பாடுவதால் பலனில்லை இந்தி, சமஸ்கிருத திணிப்பே மத்திய அரசின் கொள்கை: உதயநிதி குற்றச்சாட்டு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலை, பூம்பாறை, மூஞ்சிக்கல் ஆகிய பகுதிகளில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்னும் தேர்தல் பிரசாரத்தை நேற்று மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் வரும் நேரங்களில் மட்டும் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். நாடாளுமன்ற தேர்தலின்போது வந்தார். சட்டமன்ற தேர்தல் வருவதால் தற்போது வந்துள்ளார்.  தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் அதிமுக அரசு விட்டுக் கொடுத்துள்ளது. கல்வி உரிமையை விட்டுக் கொடுத்ததால், பல உயிர்களை இழந்திருக்கிறோம். தமிழகத்தை மோடியிடம் எடப்பாடி அடகு வைத்துவிட்டார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு கொடுத்த ஆதரவை தமிழக மக்கள் தொடர வேண்டும். நான் இதுவரை 67 தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளேன். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் உள்ள காளியம்மன் கோயில் பகுதியில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில், உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘பிரதமர் மோடி அவ்வையார், பாரதியார் பாட்டுகளைப் பாடுவதாலும், தமிழில் பேசுவதாலும், தமிழகத்திற்கு நன்மை கிடைக்கப்போவதில்லை. தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் திணிப்பே மத்திய அரசின் கொள்கை. ஒக்கி, கஜா புயல்களின்போது தமிழகத்தின் பெரும் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதற்கு மத்திய அரசு போதிய நிவாரணம் தரவில்லை’’ என்றார்.

Tags : Udayanidhi ,Central Government , Udayanithi accuses Hindi, Sanskrit dumping of central government policy
× RELATED திருச்செந்தூரில் திமுக வேட்பாளர்...