×

சாலை விபத்து வழக்கில் நடைமுறை சிக்கல் தவிர்க்க போலீஸ், ஆர்டிஓ, நெடுஞ்சாலை இணைக்கும் ஐராட் சாப்ட்வேர்: இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது

வேலூர்: தமிழகத்தில் கொரோனா காலத்தில் சாலை விபத்து எண்ணிக்கை சற்று குறையத்தொடங்கியது. தற்போது மீண்டும் பழையபடி சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தால், விபத்து நடந்த எல்லைக்குட்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்து நடந்த இடத்தை புகைப்படம் எடுத்து, அதில் சிக்கியவர்களின் முழுவிவரங்களையும் குறிப்பிட்டு வழக்குப்பதிய வேண்டும்.

அதேபோல் அந்த இடத்தில் விபத்திற்கான காரணம் வாகனத்தினால் ஏற்பட்டதா? என்ன காரணம் என்று சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் விபத்து நடந்த இடத்தில் புகைப்படம் எடுத்து, விபத்துக்கான காரணம் என்ன? சாலைகளின் வளைவுகளால் விபத்து ஏற்பட்டதா? என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். இதுபோன்று 3 துறைகளிலும் ஒரே விபத்து குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

இதையடுத்து விபத்தில் சிக்கியவர் இழப்பீடு கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், விபத்துக்கான விவரங்களை ஒவ்வொரு துறையிடமிருந்தும் பெறவேண்டியிருக்கும். இதனால் காலநேரம் அதிகமாகும். இதில் உள்ள நடைமுறை சிக்கலை தவிர்க்க, வழக்கில் தொடர்புடைய போலீஸ், நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்துத்துறை ஆகிய 3 துறைகளையும் இணைக்கும் விதமாக, ஐராட்(IRAD-integrated road accident database) என்ற சாப்ட்வேர் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : RTO ,road accident , Police, RTO, highway linking iRot software to be implemented by the end of this month to avoid practical problems in case of road accident
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு