வெறும் அறிவிப்பால் எந்தப் பயனும் இல்லை திட்டங்களை அறிவிப்பது மட்டுமே சாதனை அல்ல: ப.சிதம்பரம் பேச்சு

சிவகங்கை: சிவகங்கையில் வட்டார காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்து பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை போல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெறவேண்டும். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியில் போட்டியிட்ட நாம் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அந்த கணக்கின்படி பார்த்தால் சட்டமன்ற தேர்தலில் நாம் 228 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும்.

கடந்த 10 ஆண்டு ஆட்சி செய்த அதிமுக கடைசி 3 மாதத்தில்தான் சுற்றி சுற்றி பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார்கள். இதனால் எந்தப் பயனும் கிடையாது. ஒரு திட்டம் முற்றுப் பெற்றால்தான் சாதனை. வெறும் அறிவிப்பில் எந்த சாதனையும் கிடையாது. அறிவிப்பு என்பது வேறு, செயல்படுவது என்பது வேறு. விவசாய கடன் ரத்து என்ற அறிவிப்புகள் வந்துள்ளன. மத்திய நிதியமைச்சர் தமிழகத்திற்கு சாலை திட்டங்களை அறிவித்துள்ளார். ஆனால் இத்திட்டங்களுக்காக நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

அதிமுக ஆட்சியால் எந்த பயனும் இல்லை. 10 ஆண்டு ஆட்சிக்கு ஓய்வு தரவேண்டும். நமது ஆலோசனைகளை ஏற்கும் ஆட்சி வரவேண்டும் என்றால் நமது கூட்டணி ஆட்சி வரவேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். தேர்தல் வரவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி இந்த ஆண்டுக்கான முழு  பட்ஜெட்டை தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியாகிறது. அது மரபு  கிடையாது. அப்படி செய்தால் கடுமையாக எதிர்ப்பேன். இபிஎஸ், ஓபிஎஸ்  இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. அதனால் டிடிவி உள்ளே நுழைகிறார். எனவே, அதிமுக உடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>