×

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை விவகாரம் தண்டனையில் இருந்து தப்பினார் டிரம்ப்: வாக்கெடுப்பில் கண்டன தீர்மானம் தோல்வி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் 2வது முறையாக போட்டியிட்ட குடியரசு கட்சியின் டெனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட சமயத்தில், டிரம்ப் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். தலைநகர் வாஷிங்டனில் போராட்டம் நடத்தியவர்கள், நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் உள்ளேயே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டு தாக்கினர். இதற்கு தூண்டி விட்டதே டிரம்ப் தான் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், அவரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கீழவையான பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து மேலவையான செனட் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் நடந்தது. இதில், 57 செனடர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 43 பேர் எதிர்த்தும் ஓட்டளித்தனர். டிரம்ப்பின் சொந்த கட்சிக்காரர்கள் 7 பேரே அவருக்கு எதிராக ஓட்டளித்தனர். ஆனாலும். 100 உறுப்பினர்களை கொண்ட செனட் சபையில், மூன்றில் இரண்டு பங்கு விகிதத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 67 ஓட்டுகள் பெறாததால், கண்டன தீர்மானம் தோல்வி அடைந்தது. ஒருவேளை இந்த தீர்மானம் வெற்றி பெற்றிருந்தால், அடுத்த முறை அதிபர் தேர்தலில் டிரம்ப்பால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். தற்போது, தண்டனையில் இருந்து  அவர் தப்பி உள்ளார்.


* திரும்ப வந்துட்டேன்னு சொல்லு
அதிபர் பைடன் அளித்த பேட்டியில், ‘‘இது நமது வரலாற்றின் சோக அத்தியாயங்கள். இது, அரசியலமைப்பு பலவீனமாக இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அமெரிக்காவில் வன்முறை, பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் இடமில்லை’’ என்றார். டிரம்ப் கூறுகையில், ‘‘எந்தவொரு அதிபருக்கும் நடக்காத ஒரு விஷயம் எனக்கு நடந்துள்ளது. எனது லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன், மீண்டும் தீவிர அரசியலை தொடர்வேன்,’’ என்றார்.

* 2 தீர்மானங்கள்: இரண்டிலும் தப்பினார்
அமெரிக்க வரலாற்றிலேயே 2 முறை பதவி நீக்க கண்டன தீர்மானத்தை சந்தித்த ஒரே அதிபர் டிரம்ப் மட்டுமே. இதில், இரண்டிலும் அவர் தப்பி உள்ளார். மேலும், பதவி விலகிய பிறகு கண்டன தீர்மானத்தை எதிர்கொண்ட ஒரே அதிபரும் இவர் தான்.

Tags : Trump ,US , Trump escapes punishment over US congressional violence: Defeat resolution condemns referendum
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...