×

பெரம்பலூர் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் சீட்டா?.. முட்டி மோதும் அதிமுக சீனியர் பிரபலங்கள்: ஒருவரை ஒருவர் புகழ்ந்தபடி உள்குத்து வேலையில் தீவிரம்

பெரம்பலூர்: தமிழகத்தின் மையத்திலுள்ள தனிதொகுதியான பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு 1951ம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 1957 தேர்தலில் இருந்துதான் தனித்தொகுதியாக உருவெடுத்தது. இதுவரை 1962, 1967, 1971, 1980, 1996, 2006 ஆகிய 6 முறை திமுகவும், 1977, 1991, 2001, 2011, 2016 ஆகிய 5 முறை அதிமுகவும், 1957ல் தனித்தும், 1984ல் கூட்டணியோடும் என 2 முறை காங்கிரசும், 1951ல் ஒருமுறை சுயேட்சையும், 1989ல் ஒருமுறை கூட்டணியுடன் இந்திய பொது உடைமை கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. திமுக, அதிமுக 7முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் அதிமுக 4 முறையும், திமுக 3முறையும் வெற்றிபெற்றுள்ளன. ஆளுங்கட்சி சார்பாக 2011, 2016 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றதால் தமிழ்ச்செல்வன் 3வது முறையாக போட்டியிட முனைப்பு காட்டி வருகிறார். அதிமுகவில் பேரவை துணைச்செயலாளர், மாவட்ட பிரதிநிதி, மாவட்ட மாணவரணி செயலாளர் என எளிமையாக வலம் வந்த தமிழ்ச்செல்வனுக்கு, சசிகலா உறவினரான இளவரசியின் அண்ணன் கண்ணதாசன் பெரம்பலூரில் பிஆர்ஓவாக இருந்தபோது எதிர்பாராத அதிர்ஷ்டம்போல் எம்எல்ஏ சீட்டு கிடைத்தது.

அதுவே 2016ல் தொடர்ந்தது. 2வது முறை வெற்றி பெற்றபோதே தலித் எம்எல்ஏக்கள் சார்பாக, தனக்கு அமைச்சர் பதவி கேட்டு தமிழ்ச்செல்வன் அடம்பிடித்தார். கை நழுவிப்போன வாய்ப்பு தற்போது கண்முன் தெரிவதாகக்கூறி, 3வது முறை சீட்டு மட்டும் கிடைத்துவிட்டால் அடுத்த அவதாரம் அமைச்சர்தான் என அடிமட்ட தொண்டர்களிடம் கூட அடித்துச்சொல்லி வருகிறார். 2கலைக்கல்லூரி, 1 ஐடிஐ, விசுவக்குடி அணை, சுற்றுலாபூங்கா, ஆலத்தூர் - செட்டிக்குளம்- செஞ்சேரி இணைப்புச்சாலை, டி.களத்தூர் மண்ணச்சநல்லூர் இணைப்புச்சாலை, 6 தடுப்பணைகள், எம்ஆர்ஐ ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, சின்ன முட்லு அணைக்கான ஆய்வு, தரம்உயர்த்தப்பட்ட மருத்துவமனை ஆகியவற்றை தான் கொண்டு வந்ததாகக் கூறி வருகிறார். பெரம்பலூர் மாவட்டத்தின் ரியல்ஹீரோ என பேசப்பட்ட முன்னாள் கலெக்டர் தரேஷ்அஹமது தான் இவற்றையெல்லாம் பெரம்பலூருக்கு கேட்டுப்பெற்றுத்தந்ததாக பொதுமக்கள் அந்த கலெக்டரை இன்னமும் புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 3 முறை ஒருவருக்கே சீட்டு தருவதா, கட்சியில் வேறு ஆளே இல்லையா என முணுமுணுக்கும் மூத்த நிர்வாகிகளின் குரல் தலைமை கழகத்தில் எதிரொலித்து வருகிறது. அமைச்சராக மட்டுமன்றி, துணை சபாநாயகராகவும் பதவி வகித்த அனுபவம் உள்ளது. அடுத்த வாய்ப்பு வரும்வரை காத்திருக்க கூட முடியாது. இப்போதே வாய்ப்பளித்து சீட்டுகொடுங்கள் என அருணாச்சலமும், எம்பியாக மற்றும் எம்எல்ஏவாக என இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள சந்திரகாசி, எம்எல்ஏவாக பதவி வகித்துள்ள பூவை. செழியன் என மூத்த நிர்வாகிகளும் முண்டியடித்து சீட்டுபிடிக்க முயன்று வருகின்றனர். இதற்காக சிட்டிங் எம்எல்ஏ மீது சினிமாபாணியில் எழுந்த புகார்களைக்கூட கிண்டிக்கிளறி குழிபறித்தும் வருகின்றனர். இவர்கள் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு எதிரணியாக செயல்பட்டு வருவதால் முதல்வர் வந்த போது கூட தனியாகத்தான் வரவேற்பளித்தனர்.

அதே நேரம் 96ல் தோற்றுப்போன உடும்பியம் முருகேசன், பெரியம்மாபாளையம் கஜேந்திரன், எசனை பன்னீர் செல்வம், டாக்டர் ஆனந்தமூர்த்தி, நகரச்செயலாளர் ராஜபூபதி, முன்னாள் நகராட்சி தலைவர் ரமேஷ், வழக்கறிஞர்கள், டாக்டர்கள் பலரும் பலவழிகளில் சீட்டுக்காக பாய்ச்சல் காட்டி வருகின்றனர். இதற்காக அனைவரும் பொதுக்கூட்ட மேடைகளில் அரசு விழாக்களில் அடுத்த வரை அடுக்குமொழிகளில் புகழ்ந்தும், அதே நேரம் கட்சித்தலைமையிடம் கணக்கில்லாத புகார்களைக் கூறியும் உள்குத்து வேலைகளை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளில் ஒன்னுமே நடக்கலங்க... கடிந்து கொள்ளும் கட்சிக்காரர்கள்...
திமுக ஆட்சியில் கொண்டு வந்ததால் ஓரங்கட்டப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரியை பெரம்பலூருக்கு கொண்டு வருகிறேன். சின்னமுட்லு அணையை சீக்கிரமாக பெற்றுத்தருகிறேன் எனக்கூறி ஏமாற்றி விட்டாரே என வாக்காளர்கள் மட்டுமல்லாமல் கட்சிக்காரங்களே பேசுகின்றனர். தனிநபர் கழிப்பறைகள் ஊருக்கு ஊர் 20, 30 என பார்க்கும் இடமெங்கும் பயன்பாடின்றி கிடக்கின்றன. குரும்பலூர், வேப்பூர் கல்லூரிகளுக்கு பஸ்வசதி இல்லாமல் பால் வண்டியில் மாணவிகளும், பஸ் படிகட்டுகளில் மாணவர்களும் தினம்தினம் திண்டாடிவருகின்றனர். அரசுதலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. ஜவுளிப்பூங்கா திட்டம் சமாதியானது, ரயில்வசதி இல்லை. ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், சின்ன வெங்காய ஏலமையம், அதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக்கும் மையம், உலோக திருமேனிகள் பாதுகாப்பு பெட்டகம், எரிவாயு தகனமேடை, கிரிக்கெட் மைதானம், இறைச்சி வெட்டும் கூடம் என எதுவுமே செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது.

சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு பாக்கி பணத்தை மாநில அரசிடம் பெற்றுத்தர வில்லை. தொடர் மழையால் பயிர்கள் பாதிப்புக்குள்ளான விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை. ஆனால் கதாநாயகனாக வலம் வருவதிலேயே தமிழ்ச்செல்வன் கவனம் செலுத்துகிறார் என கட்சிக்காரர்களே கலாய்த்து வருகின்றனர். சாகுபடியில் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதித்து வரும் பருத்திக்கென நூற்பாலை, மக்காச்சோளத்திற்கென தீவன தயாரிப்புஆலை என வேலை வாய்ப்பிற்கான தொழிற்சாலைகளை தோற்றுவிக்க 10ஆண்டுகளில் கடுகளவும் முயற்சிக்க வில்லையென கட்சிக்காரர்களே கடிந்து கொள்கின்றனர்.

Tags : AIADMK ,celebrities ,constituency ,MLA ,Perambalur , AIADMK senior celebrities clash over sitting MLA in Perambalur constituency?
× RELATED சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண...