×

கரம்பை மண் தட்டுப்பாடு: செங்கல் விலை கிடுகிடு உயர்வு

வருசநாடு: கடமலை- மயிலை ஒன்றியத்தில் ஏராளமான செங்கல் காளவாசல்கள் இயங்கி வருகின்றன. இங்கு தயார் செய்யப்படும் செங்கல் திண்டுக்கல், கரூர் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் ஏராளமான கண்மாய்கள் இருந்தும் அங்கு செங்கல் தயாரிப்பிற்கு பயன்படும் கரம்பை மணலை அள்ள அரசு தடை விதித்துள்ளது. இதனால் செங்கல் காளவாசல் நடத்தி வரும் உரிமையாளர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து கரம்பை மண் வாங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கரம்பை மண் இறக்குமதி செய்ய அதிக அளவில் செலவு அதிக அளவில் ஏற்படுவதால் செங்கல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் வரை ரூபாய் 6முதல் 6.50 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த செங்கல் தற்போது 7 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதனால் புதிதாக வீடு கட்டுபவர்கள் கவலையடைந்துள்ளனர். விலை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில் ஏராளமானோர் முன்னெச்சரிக்கையாக அதிக அளவில் செங்கல்களை வாங்கி இருப்பு வைத்து வருகின்றனர். விலை அதிகரித்தாலும் கரம்பை மண் இறக்குமதி செலவு அதிக அளவில் உள்ளதால் செங்கல் காளவாசல் உரிமையாளர்களுக்கும் அதிக அளவில் லாபம் கிடைக்கவில்லை. இதுகுறித்து காளவாசல் தொழிலாளர்கள் கூறுகையில்,` கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஏராளமான கண்மாய்கள் உள்ளது. இதில் பெரும்பாலானவை பராமரிப்பில்லாமல் காணப்படுகிறது. அங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு கரம்பை மண் அள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கினால் உற்பத்தி செலவு குறைந்து செங்கல் விலையும் குறையும். மேலும் மணல் அள்ளுவதால் கண்மாய்களும் நீர் தேக்கி வைக்கும் வகையில் மாறி விவசாயத்திற்கும் பயனளிக்கும்’ என்று கூறினர்.



Tags : Soil shortage: Brick prices soar
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு