×

யானைகள் போக்குவரத்துக்கு இடையூறு எனக்கூறி பெரியாறு அணைப்பகுதியில் மரங்கள் வெட்டி சாய்ப்பு

* கேரள வனத்துறையினர் அட்டகாசம்
* தமிழக விவசாயிகள் போராட முடிவு

கூடலூர்: பெரியாறு அணைப்பகுதியில் யானைகள் போக்குவரத்துக்கு இடையூறு எனக்கூறி, கேரள வனத்துறை மரங்களை வெட்டி சாய்ப்பதால், தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் இருக்கும் முல்லைப்பெரியாறு அணை தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கடந்த 2014ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பேபி அணையை பலப்படுத்திய பின், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என தெரிவித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றம் நியமித்த கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டத்திலேயே பேபி அணையை பலப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், பேபி அணையை பலப்படுத்த அணைப்பகுதியில் உள்ள 23 மரங்களை வெட்டினால் சுற்றுச்சூழல், புலிகள் சரணாலயம் பாதிக்கப்படும் என கேரள வனத்துறை கடந்த 7 ஆண்டுகளாக அனுமதி தராமல் உள்ளது. இதனிடையே, கடந்த சில நாட்களாக பெரியாறு அணைப்பகுதியில் கேரள வனத்துறையினர் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி வருகின்றனர். புலிகள் சரணாலயத்திற்குள் இருக்கும் மரங்களை கேரள வனத்துறை வெட்டுவது ஏன்? யார் அனுமதியளித்தது? என அணையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக பொதுப்பணித்துறைக்கு தெரியவில்லை. இதை தடுக்கவோ, நிறுத்தவோ முயற்சி எடுக்கவில்லை.

இதுகுறித்து கேரள வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வனப்பகுதியில் யானையின் வழித்தடத்தில் மரங்கள் இடையூறாக இருப்பதால், அவைகள் வெட்டப்படுகின்றன’’ என்றார். இச்சம்பவத்தில் தமிழக பொதுப்பணித்துறையினர் அமைதி காப்பதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்க இணைச்செயலாளர் கம்பம் ரஞ்சித்குமார் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 7 ஆண்டுகளாகியும் பேபி அணையை பலப்படுத்துவதற்கு, அப்பகுதியில் உள்ள 23 மரங்களை வெட்ட, தமிழக பொதுப்பணித்துறையால் அனுமதி பெற முடியவில்லை. ஆனால், கேரள வனத்துறை நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டுவதை வேடிக்கை பார்க்கின்றனர்.

புலிகள் சரணாலயப்பகுதியில் மரங்களை கேரள வனத்துறை வெட்டும்போது, அதே அனுமதியில் பேபி அணையை பலப்படுத்த தளவாட பொருட்கள் கொண்டு செல்ல இடையூறாக இருக்கும் 23 மரங்களை வெட்டி, பேபி அணையை பலப்படுத்தி, பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க தமிழக அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து வரும் 19ம் தேதி நடக்க உள்ள கண்காணிப்பு குழுவினர் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறையினர் வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளை திரட்டி தமிழக பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம்’’ என்றார்.

Tags : area ,Periyar Dam , Elephant, traffic, obstruction, dam, trees, cut
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...