×

சேத்துப்பட்டு தாலுகாவில் அதிகாரிகளின் போலி முத்திரை, கையொப்பத்துடன் பட்டா வினியோகம்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு தாலுகாவில் அதிகாரிகள் முத்திரை மற்றும் கையொப்பத்ைத போலியாக போட்டு பட்டாக்கள் வினியோகம் செய்துள்ள சம்பவத்தால் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகாவில் தச்சாம்பாடி பிர்கா, வந்தவாசி தாலுகாவில் பெரிய கொழப்பலூர், நெடுங்குணம் பிர்காக்கள், ஆரணி தாலுகாவில் தேவிகாபுரம்  பிர்கா ஆகியவற்றை இணைத்து சேத்துப்பட்டு புதிய தாலுகா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உதயமானது.

இந்நிலையில், சேத்துப்பட்டு தாலுகாவில் சில கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிகாரிகளின் போலி கையொப்பத்துடன் பட்டாக்களை வழங்கி வருகின்றனர். இதேபோல், வந்தவாசி தாலுகா நெடுங்குணம் பிர்காவில் கடந்த 2007ம் ஆண்டு வழங்கப்பட்டதுபோல் முத்திரையிட்டு, அதிகாரிகள் கையொப்பம் போலியாக இடப்பட்டு சிலருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

வழிவழியாக தாங்கள் வசிக்கும் வீடு மற்றும் நிலங்களுக்கு பட்டாக்கள் பெற முடியாமல் ஏழை மக்கள் காத்துக்கிடக்கும் நிலையில், வசதி படைத்த நபர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு இதுபோன்று போலி பட்டாக்களை கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கியுள்ளனர். குறிப்பாக, நெடுங்குணம், பெரியகொழப்பலூர்,  ஆவணியாபுரம், நமத்தோடு, சேத்துப்பட்டு, பழம்பேட்டை, ஆத்தூரை பகுதிகளில் பலருக்கு இதுபோன்று போலி முத்திரை மற்றும் கையொப்பம் இட்டு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகவலை அறிந்து தாசில்தார் பூங்காவனம், துணை தாசில்தார் கோமதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வினியோகிக்கப்பட்ட பட்டாக்களில் அதிகாரிகள் கையொப்பம், ரப்பர் ஸ்டாம்ப், கோபுர சீல் என அனைத்தும் பொய்யாக உள்ள நிலையில் இதன் பின்னணியில் பெரிய நெட்ஒர்க் இருக்கலாம் என சந்தேகித்துள்ள அவர்கள் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.
ஆனால் போலீசார், இதுகுறித்து குற்றப்பிரிவு டிஜிபியிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் அதில் தலையிட்டு தொடர்புடைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : taluka ,Revenue officials ,Chetput , Cheating, distribution of officers, forged stamp,, strap
× RELATED வேதாரண்யத்தில் 3 நாட்களாக மக்களை...