×

வேலூர் சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலையோரம் மின்சார டிரான்ஸ்பார்மரையும் விட்டு வைக்காத ஆக்கிரமிப்பாளர்கள் : ஆபத்து ஏற்படும் முன் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோயிலை ஒட்டி நெடுஞ்சாலையை மட்டுமின்றி அதை ஒட்டிய மின்சார டிரான்ஸ்பார்மரையும் சேர்த்து ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை விபரீதம் நேரும் முன் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஆக்கிரமிப்பு என்ற சட்டவிரோத நடவடிக்கை நீர்நிலைகள் மட்டுமின்றி, அரசின் பயன்பாட்டுக்காக உள்ள நிலங்கள், கட்டிடங்கள், சாலைகள், பிளாட்பாரங்கள் என்று எல்லா நிலையிலும் நிறைந்துள்ளது. அதிகாரிகள் இவற்றை கண்டுகொள்ளாததால் இத்தகைய ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு தீர்வு என்பது மட்டும் இன்று வரை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இதில் ஒரு படி மேலே போய் வருகின்ற ஆபத்தை பற்றி அறிந்தும் மின்சார டிரான்ஸ்பார்மரையே அதன் இடைவெளியை கூட விட்டு வைக்காமல் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர் ஆக்கிரமிப்பாளர்கள். வேலூர் சத்துவாச்சாரியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் சர்வீஸ் சாலையை ஒட்டி ஆவின் எதிரில் அமைந்துள்ள சாலை கெங்கையம்மன் கோயில் ஊர் மக்களின் வழிபாட்டு தலமாக இருப்பதால் நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளவில்லை. இதையே தங்களுக்கு சாதகமாக கொண்டு கோயிலின் இருபுறமும் நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை மழைநீர் வடிகால்வாய் மீது அமைந்துள்ள நடைபாதையை முழுவதுமாக ஆக்கிரமிப்பாளர்கள் கபளீகரம் செய்துள்ளனர்.

இதனால் சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமல்ல, பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு சர்வீஸ் சாலை மட்டுமல்ல, அங்குள்ள கானாற்றையும் சேர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிடம் கட்டியுள்ளனர்.  அதேபோல் கோயிலை ஒட்டி அமைந்துள்ள மின்சார டிரான்ஸ்பார்மரையும் ஆக்கிரமிப்பாளர்கள் விட்டு வைக்கவில்லை. டிரான்ஸ்பார்மரை மறைத்து, அதன் கீழேயே கட்டிடத்தை கட்டியுள்ளனர். எதிர்பாராத நேரத்தில் மின்கசிவோ அல்லது ஆயில் நிரப்பப்பட்ட டிரான்ஸ்பார்மர் குழாய் வெடித்தாலோ ஏற்படும் விபரீதத்தை அறிந்தோ அல்லது அறியாமலோ இதை செய்துள்ளார்களா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

எனவே, சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் தொடங்கி ரங்காபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலையை ஒட்டி மழைநீர் வடிகால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சாலை கெங்கையம்மன் கோயிலை ஒட்டி விளையும் விபரீதத்தை அறியாமல் மின்சார டிரான்ஸ்பார்மரின் கீழே செய்துள்ள ஆக்கிரமிப்பையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Occupiers ,power transformer ,Vellore Sattuvachari ,National Highway , Vellore Sattuvachari, National Highway, Electric Transform
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து...