அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில்: அதிமுகவில் கூட்டணியுடன் சேர்த்து 5 பேர் சீட் கேட்டு போட்டி

அரக்கோணம்,: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில், அரக்கோணம் சட்டமன்றம் (தனி) தொகுதியாக உள்ளது. அரக்கோணம் நகராட்சி, 2 ஒன்றியங்கள், ஒரு பேரூராட்சியை உள்ளடக்கியது. அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் தற்போது 1 லட்சத்து 10ஆயிரத்து 327 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16ஆயிரத்து 167 பெண் வாக்காளர்களும், 3ம் பாலினத்தவர்கள் 17 பேரும் என்று மொத்தம் 2லட்சத்து 26ஆயிரத்து 511 வாக்காளர்கள் உள்ளனர். 329 வாக்கு சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி கடந்த 1952 முதல் 1971 ஆம் ஆண்டு வரையில் தேர்தலின் போது பொது தொகுதியாக இருந்தது. இதையடுத்து, 1977 முதல் தற்போது 2021 வரை தனி தொகுதியாக உள்ளது. இந்நிலையில், கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய சட்டமன்ற தேர்தல்களின் போது, அதிமுகவை சேர்ந்த சு.ரவி வெற்றி பெற்று எம்எல்ஏவானார். இதைதொடர்ந்து, 2021 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதில், எந்த கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்று, எம்எல்ஏ ஆக போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதற்கிடையே, அரசியல் கட்சிகளில் சீட் கேட்டு நடக்கும் போட்டியும் தொடங்கியுள்ளது. அரக்கோணம் சட்டமன்ற (தனி) தொகுதி 2021 தேர்தலில், பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் என்று பலர் வேட்பாளர்களாக களம் காண உள்ளனர். இதில், அரக்கோணம் சட்டமன்ற (தனி) தொகுதி பொறுத்தவரையில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுவதற்கு தற்போது எம்எல்ஏவாக உள்ள சு.ரவி மீண்டும் சீட் கேட்டுள்ளாராம்.

இவர் ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக சார்பில் சு.ரவி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதைதொடர்ந்து, 2011ல் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக ஆனார். பின்னர், 2016ல் நடைபெற்ற தேர்தலிலும் மீண்டும் சு.ரவியே போட்டியிட்டு, வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக உள்ளார். இவர், அரக்கோணம் தொகுதிக்கு அரசு கலைக் கல்லூரி, கல்வி மாவட்டம், அரக்கோணம் கோட்டம், ெகாசஸ்தலை ஆற்றில் தடுப்பணை, அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது. உயர்மட்ட மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டுவந்தேன். எனவே வரும் சட்டமன்ற தேர்தலில், எனக்கு மீண்டும் சீட் வேண்டும் என்று சு.ரவி அதிமுக தலைமையிடம் பேசிவருகிறாராம்.

இந்த வரிசையில் அரக்கோணம் முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட மகளிர் அணி இணைசெயலாளருமான பவானி கருணாகரன்  சீட் கேட்டு கட்சியில் உயர்மட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசிவருகிறாராம். இவரை தவிர்த்து கட்சியில் மூத்த நிர்வாகியான பொன்பார்த்தீபன் சீட் கேட்டுள்ளார். இவர் 4 முறை நகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். தற்போது அரக்கோணம் வட்ட செயலாளராக உள்ளார். இவரும் தொகுதியில்  அதிமுகவில் போட்டியிட சீட் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். அதேபோல், அரக்கோணம் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான ஏ.பி.எஸ்.லோகநாதனும் சீட் கேட்டு இலைகட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறாராம்.

அதிமுக கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம் கட்சி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜெகன்மூர்த்தியும் அரக்கோணம் தொகுதியில் சீட் கேட்டுள்ளார். இவர், அரக்கோணத்தில் எம்எல்ஏவாக இருந்தவர் என்பதால், மீண்டும் எனக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறாராம். இப்படி அதிமுகவில் எம்எல்ஏ, உள்கட்சியினர், கூட்டணி கட்சி என்று 5 பேர் சீட் கேட்டு போட்டி போடுகிறார்களாம். இருப்பினும், அதிமுக சார்பில் சட்டமன்ற  தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்கள் பெறும்போது, அரக்கோணம்  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் சில நிர்வாகிகள் மனுக்களை பெறுவதற்கான வாய்ப்புகளும்  உள்ளதாம். யார் போட்டி, போட்டாலும், ராணிப்பேட்டை அதிமுக மாவட்ட  செயலாளராகவும், அரக்கோணம் எம்எல்ஏவாகவும் தற்போது இருப்பதால், மீண்டும்  சு.ரவிக்குதான் கட்சியில் மீண்டும் சீட்டு கிடைக்கும் என்று கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.

Related Stories:

>