டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்பட்டார் பிரதமர் மோடி; சென்னையில் போக்குவரத்து மாற்றம்; பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார்

டெல்லி: டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை புறப்பட்டார். காலை 10.30 மணியளவில் சென்னை வந்தடைவார் என கூறப்படுகிறது. பிரதமர் மோடி சென்னை வருகையயொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக, சரக்கு வாகனங்கள் சென்னை எல்லைக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநகர பேருந்துக்கள், மக்களின் வாகனங்கள் செல்லவும் முக்கிய இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதித்து போக்குவரத்து காவல்த்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

சென்னை வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ரூ.3,770 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரெயில் முதல்கட்ட விரிவாக்க திட்டம், ரூ.293.40 கோடி செலவில், சென்னை கடற்கரை-அத்திபட்டு இடையே 21.1 கி.மீ. நீளமுள்ள 4-வது ரெயில் பாதை இணைப்பு, ரூ.423 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம்-கடலூர், மயிலாடுதுறை-தஞ்சை மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையே 228 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்டு உள்ள ஒருவழி ரெயில் பாதை ஆகிய முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.2,640 கோடி செலவில் கல்லணை கால்வாய் விரிவாக்கம், புதுப்பிப்பு மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்கும், சென்னை தையூரில் ரூ.1,000 கோடி செலவில் ஐ.ஐ.டி.க்காக அமைக்கப்பட உள்ள டிஸ்கவரி கேம்பஸ்

வளாகம் அமைப்பதற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். சென்னை ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் போர் பீரங்கியை இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மத்திய-மாநில அரசின் உயரதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். மோடியின் சென்னை வருகையால் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>