அமமுக வட்ட துணை செயலரை ஓடஓட விரட்டி வெட்டு: 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலை

சென்னை: அமமுக கட்சியின் வட்ட துணை செயலாளரை மர்ம கும்பல் ஒட ஓட விரட்டி கத்தியால் வெட்டிய சம்பவம் வில்லிவாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் பஜனை கோவில் 2வது தெருவை சேர்ந்தவர் டில்லிபாபு(42). அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வட்ட துணை செயலாளர். இவர் நேற்று மாலை 6.30 மணி அளவில் பைக்கில் பஜனை கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, இளைஞர் ஒருவர் டில்லிபாபுவை வழி மறித்து தன்னுடைய பைக்கை போலீசார் பிடித்து விட்டதாக கூறி உதவுமாறு கேட்டுள்ளார். அதையடுத்து டில்லிபாபு தனது பைக்கில் இருந்து இறங்கி ஹெல்மெட்டை கழற்றினார். உடனடியாக அந்த நபருடன் வந்த 4 பேர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் டில்லிபாபுவை தாக்கினர். இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து அந்த கும்பல் ஓடஓட விரட்டி சென்று டில்லிபாபுவை வெட்டினர். சம்பவத்தால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். டில்லிபாபு அவர்களிடம் இருந்து தப்பி அருகேயுள்ள ஒரு வீட்டில் புகுந்து தப்பினார். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.  இது குறித்து அறிந்த ஐசிஎப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரத்த காயத்துடன் மயங்கி விழுந்த டில்லிபாபுவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 13 தையில் போடப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஐசிஎப் போலீசார் வழக்கு பதிந்து தப்பிய கும்பலை தேடி வருகின்றனர். அமமுக கட்சியின் வட்ட துணை செயலாளரை மர்ம கும்பல் ஒட ஓட விரட்டி கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More