×

திருப்போரூர் - ஆலத்தூர் இடையே பாதியில் நிற்கும் ஓஎம்ஆர் புறவழிச்சாலைப் பணி: விரைந்து முடிக்க வலியுறுத்தல்

திருப்போரூர்: திருப்போரூர் - ஆலத்தூர் இடையே காலவாக்கம் கிராமத்தில் ஓஎம்ஆர் புறவழி சாலை பணி பாதியிலேயே நிற்கிறது. இதனை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வுலியுறுத்துகின்றனர். பழைய மாமல்லபுரம் சாலை எனப்படும் ராஜிவ் காந்தி சாலை சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 6 வழிப்பாதையாகவும்ம, சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை 4 வழிப்பாதையாகவும் உள்ளது. இச்சாலையில் படூர், கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் புறவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. படூர் - தையூர் இடையே ஒரு புறவழிச் சாலையும், திருப்போரூர் - ஆலத்தூர் இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. படூர் - தையூர் இடையிலான புறவழிச்சாலை 4.67 கிமீ தூரமும், திருப்போரூர் - ஆலத்தூர் இடையிலான புறவழிச் சாலை 7.45 கிமீ தூரமும் அமைந்துள்ளது. இந்த 2 புறவழிச்சாலைகளுக்கும் சேர்த்து மொத்த திட்ட செலவாக 465 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு இந்த சாலை அமைக்க படூர், கழிப்பட்டூர், கேளம்பாக்கம், தையூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர், தண்டலம், ஆலத்தூர், வெங்களேரி உள்பட 13 கிராமங்களில் நிலம் கையகப் படுத்தப்பட்டு, எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன. முதற்கட்டமாக படூர், கேளம்பாக்கம் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த புறவழிச்சாலையின் குறுக்கே கேளம்பாக்கம் - கோவளம் சாலை வருவதால் அங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. பாலப்பணிகள் முடிந்த பின்னரும், புறவழிச்சாலை அந்த பாலத்துடன் இதுவரை இணைக்கவில்லை. அதேபோன்று கேளம்பாக்கத்தில் இருந்து தையூர் வரை புறவழிச்சாலை பணிகள் தொடங்கிய நிலையிலேயே உள்ளது. இந்த பணிகள் தொடர்ந்து நடத்தி புறவழிச் சாலையை ஓஎம்ஆர் சாலையுடன் தையூர் - செங்கண்மால் பகுதியில் இணைக்க வேண்டும். இதனால் 75 சதவீத சாலைப்பணிகள் முடிந்தும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

அதேபோன்று அடுத்த கட்டமாக திருப்போரூர் - ஆலத்தூர் இடையே புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. காலவாக்கம் கிராமத்தில் தொடங்கப்பட்ட 2வது புறவழிச்சாலைப்பணிகள் இன்னும் முடிக்கவில்லை. நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நஷ்ட ஈடு தொகையும் இதுவரை வழங்கவில்லை. அதே நேரத்தில் காலவாக்கத்தை தாண்டி திருப்போரூரில் பெரும்பாலான நிலங்கள் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமானதாக இருப்பதால் சாலைக்காக கையகப்படுத்தும் நஷ்டஈடு தொகை இந்து அறநிலையத் துறைக்கு வழங்கப்படு சாலைப்பணிகள் முடிந்துவிட்டன. தண்டலம், வெங்களேரி கிராமத்தில் தனியாரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் இதுவரை முடியவில்லை.

தண்டலம் கிராமத்தில் சாலைக்காக கையகப்படுத்த உள்ள நிலம் ஒரு சென்ட்டுக்கு 21,870 மட்டுமே வழங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்து, அதற்கான ஒப்புதலைக் கேட்டு நில உரிமையாளர்களுக்கு தபால் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், அடிமாட்டு விலைக்கு கேட்பதாக நிலங்களை இழக்கும் விவசாயிகள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.  தற்போது தண்டலம் கிராமத்தில் ஒரு சென்ட் ₹3 லட்சம் வரை விற்பனையாகிறது. அதற்கு, சந்தை விலையில் பாதி விலையாவது கொடுத்தால்தான் நிலங்களை தருவோம் என விவசாயிகள் போராட்டங்களை நடத்துகின்றனர். இதனால், நிலங்களை கையகப்படுத்தி புறவழிச்சாலைப் பணியை முடிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. உரிய நஷ்டஈடு தொகை தராவிட்டால் நிலங்களைத் தர முடியாது என விவசாயிகளும் அறிவித்துள்ளனர்.

அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 2 முறை போராட்டம், கலெக்டரை சந்தித்து மனு அளித்தல் போன்ற நடவடிக்கை களை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். எனவே, தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நஷ்டஈடு தொகை வழங்கி நிலங்களை கையகப்படுத்தி ஓஎம்ஆர் சாலையில் அமையும் 2 புறவழிச்சாலைப் பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இலவச பாராக மாறிய அவலம்
முழுமையாக சாலைப்பணிகள் முடியாததால் வாகனப் போக்குவரத்து அந்தசாலையில் இல்லை. இதனால் ஆங்காங்கே போடப்பட்டுள்ள சாலைகள் குடிமகன்களின் திறந்தவெளி இலவச பாராக மாறி விட்டது. மாலை 6 மணிமுதல் இந்த பணி முடியாத சாலைகளில் ஆங்காங்கே கும்பல் கும்பலாக அமர்ந்து பலரும் மது அருந்துகின்றனர். அப்போது அவர்கள், காலி மது பாட்டில்களையும் அங்கேயே உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால், அதிகாலை நேரங்களில் இந்த சாலைகளில் வாக்கிங் செல்பவர்களின் கால்களை உடைந்த பாட்டில்கள் பதம் பார்க்கின்றன. எனவே போலீசார், புறவழிச்சாலையில் மது அருந்துபவர்களின் மீதும், பாட்டில்களை உடைத்து போடுபவர்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : completion ,Thiruporur ,OMR ,Alathur , OMR bypass work halfway between Thiruporur - Alathur: urging speedy completion
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா