×

கட்சி கல்வெட்டு அமைப்பதில் பாமக - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல்: திடீர் சாலை மறியலால் பரபரப்பு

குன்றத்தூர்: மாங்காடு பகுதியில் கல்வெட்டு அமைப்பதில் பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. குன்றத்தூரில் இருந்து குமணன் சாவடி செல்லும் பிரதான சாலையில், மாங்காடு பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன், இந்த பகுதியில் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டபோது, அங்கிருந்த சில கட்சிகளின் கல்வெட்டுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாமக சார்பில் புதிதாக கல்வெட்டு அமைக்கும் பணி நேற்று நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கல்வெட்டு கட்டும் பணியை நிறுத்தும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

தகவலறிந்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இரு தரப்பினரிடம் சமரசம் பேசினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர், இரு தரப்பினரும் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக, வருவாய்த்துறை சார்பில் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், அதுவரை பணிகள் எதுவும் நடக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்து இருதரப்பு கட்சி நிர்வாகிகளும் கலைந்து சென்றனர். அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க, அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாமக கல்வெட்டுக்கு அருகிலேயே அதிமுகவின் கல்வெட்டும் அமைந்துள்ளது. இதற்கு பின் பகுதியில் விடுதலைச்சிறுத்தைகளின் கல்வெட்டு அமைந்துள்ளது. தற்போது பாமக சார்பில் புதிதாக கல்வெட்டு அமைத்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கு செல்ல வழியில்லாமல் போகும். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் படத்தை மர்மநபர்கள் சிலர் கிழித்து எறிந்தால், ஏற்கனவே இருதரப்பினரும் மோதிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே இரு தரப்பினர் இடையே ஏற்படட் நடந்த பிரச்னையை வருவாய் துறையினரும், போலீசாரும் சுமுகமாக தீர்க்காததால், தற்போது ஏற்பட்ட பிரச்னைகளுக்கு காரணம் என்றனர்.

Tags : Conflict ,Liberation Tigers of Tamil Eelam ,BJP , Clash between Liberation Tigers of Tamil Eelam (LTTE) over erection of party inscription: Sudden road blockade
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு