×

காட்டுப்பள்ளியிலிருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 லட்சம் மதிப்பிலான கடல் பூச்சிகள் பறிமுதல்: ஆந்திர வாலிபர் 2 பேர் கைது

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்திச் சென்ற ரூ. 1 லட்சம் மதிப்பிலான கடல் பூச்சிகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு, ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை கைது செய்தனர். மீஞ்சூர் - நெமிலிச்சேரி 400 அடி சாலையில் நேற்றுமுன்தினம் இரவு மீஞ்சூர் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆந்திரா நோக்கி வேகமாக சென்ற இரண்டு கார்களை வழிமடக்கி சோதனை செய்தனர். அதில், 10 மூட்டைகளில் கடல் பூச்சிகள் இருப்பது தெரியவந்தது.  விசாரணையில், ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியைச் சேர்ந்த கோட்டீஸ்வரன் (32), கோதப்பட்டணத்தைச் சேர்ந்த சாய்பாபா (33) ஆகியோர் என்பதும், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி கடற்கரை பகுதியில் பிடிக்கப்பட்ட கடல் பூச்சிகளை ஆந்திராவுக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது. பெரிய மீன்களை பிடிக்க இந்த கடல் பூச்சிகளை பயன்படுத்துவார்களாம். இதனையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கடல் பூச்சி பிடிபட்ட சம்பவம் குறித்து கும்மிப்பூண்டி வனத்துறைக்கு போலீசார் தகவல் தெரிவித்தபோது, அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து, சென்னை கோட்ட வனத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் வனத்துறையினர் மீஞ்சூர் காவல் நிலையம் வந்தனர். அவர்களிடம், பிடிபட்ட 10 மூட்டை கடல் பூச்சிகள், அதனை கடத்திச் சென்ற 2 வாலிபர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள் ஆகியவற்றை போலீசார் ஒப்படைத்தனர்.


Tags : forest school ,youths ,Andhra Pradesh , 1 lakh worth of sea insects seized from forest school in Andhra Pradesh: 2 Andhra youths arrested
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி