×

கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா தர முடியாது: அறநிலையத்துறை தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு பட்டா வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அறநிலையத்துறை அளித்த தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்பேரில், வருவாய்த்துறை கள அலுவலர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு மற்றும் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில்கள் நிலங்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்பேரில், ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள் அனைத்து வரன்முறை செய்யப்பட்டு அதற்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், தற்போது வரை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு செல்லியம்மன் குடியிருப்பு பொது நலச்சங்க செயலாளர் ராமு கடிதம் எழுதினார். அதற்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்கிட வருவாய்த்துறை சார்பில் கடந்த 2019ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இந்த அரசாணை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் பேரில் இடைக்கால தடையாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், அரசால் அறிவிக்கப்பட்ட வீட்டு மனை பட்டா திட்டம் தொடர்பாக இவ்வலுவலகத்தில் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

திருக்கோயிலுக்கு சொந்தமான மனை, கட்டிடம், கடைகளுக்கான நியாயவிலை வாடகை நிர்ணயமானது அறநிலையத்துறை சட்டம் பிரிவு 34ஏன் படி நியாயவிலை வாடகை நிர்ணயக்குழு அமைத்து சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்திட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2012 பிப்ரவரி 12ம் தேதி உத்தரவிப்பட்டுள்ளது. மேலும், மனுதாரர் கோருவது போல் பல மடங்கு வாடகை உயர்த்தப்படவில்லை. கோயில் மனைகளில் குடியிருப்போருக்கும், கடை வைத்திருப்போருக்கும் உள்ள பிரச்னைகளை பேசி தீர்வு காண அரசு, அறநிலையத்துறை குடியிருப்போர் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு கமிட்டி அமைப்பது அரசின் கொள்கை முடிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Residents ,temple houses ,Treasury ,Public , Residents of temple lands cannot be given a lease: Public shocked by Treasury information
× RELATED ராசிபுரம் அருகே ரூ.7 கோடி மதிப்பிலான...