மெட்ரோ ரயில் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகை: 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்: இபிஎஸ்-ஓபிஎஸ் தனித்தனியாக சந்திக்கின்றனர்

சென்னை: மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று காலை சென்னை வருகிறார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனியாக சந்தித்து பேசுகிறார்கள். மோடி வருகையையொட்டி சென்னை போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஐந்து மணி நேரம் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும்,  முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும் பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். காலை 7.50 மணிக்கு இந்திய விமான படைக்கு சொந்தமான தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு, 10.35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

காலை 10.40 மணிக்கு தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 11 மணிக்கு சென்னை ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேடு தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு, 11.15 மணிக்கு விழா நடைபெறும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கம் வந்தடைகிறார். அங்கு சென்னை, வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர்  இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும், சென்னை கடற்கரை அத்திப்பட்டு 4 வது வழித்தடம் மற்றும் விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் ஒரு வழிப்பாதை மின்மயமாக்குதல் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட எம்.பி.டி. அர்ஜுன் எம்.கே.1ஏ, பீரங்கி கவச வாகனத்தை ராணுவத்திடம் பிரதமர் மோடி ஒப்படைக்க உள்ளார். மேலும், கல்லணை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், சென்னை இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகம் ஆகியவற்றிற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். தமிழகத்தின் கனவு திட்டமான காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தற்போதைக்கு இல்லை என்பது பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரலில்

விழா மதியம் 12.35 மணிக்கு முடிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் உள்ள ஓய்வு அறையில் தனித்தனியாக  சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அப்போது, தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள், சசிகலா விவகாரம் குறித்து இருவரும் மோடியிடம் பேசுவார்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து, மதியம் 1.05 மணிக்கு அடையாறு ஹெலிபேடுக்கு சென்றதும், 1.10 மணிக்கு தனி ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். 1.35 மணிக்கு இந்திய விமான படை தனி விமானத்தில் கேரள மாநிலம் கொச்சி புறப்பட்டு செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி செல்ல திட்டமிட்டிருந்தாலும், விமான நிலையத்தில் இருந்து கிண்டி வழியாக சாலைமார்க்கமாக பிரதமர் செல்ல விருப்பம் தெரிவித்தால், அதற்கும் தயாராக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் அடையாறு ஐஎன்எஸ் ஹெலிபேட்டில் இருந்து நேரு விளையாட்டு அரங்கத்துக்கு காரில் தான் பிரதமர் பயணம் செய்கிறார். அதனால், அவர் செல்லும் பாதையான தலைமை செயலகம், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம், பெரியமேடு ஆகிய 5 இடங்களில் மேடை அமைக்கப்பட்டு பாஜ, அதிமுகவினர் திரண்டு மேளம், நடனத்துடன் உற்சாக வரவேற்பு கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரில் பிரதமர் வரும் சாலை முழுவதும் அதிமுக சார்பில் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கும் கட்சி தலைமை உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து நேரு விளையாட்டு அரங்கம் முதல் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 10 ஆயிரம் போலீசார் நேற்று இரவு முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை பழைய விமான நிலைய பகுதி முழுவதும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் இன்று மதியம் 2 மணி வரை நீடிக்கும். பிரதமர் வருகையையொட்டி கோயம்பேடு - சென்ட்ரல், ராயபுரம் - பாரிமுனை, அண்ணாசாலை - ராயபுரம் செல்லும் வாகனங்கள் இன்று காலை 8 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை மாற்று பாதையில் திருப்பி விடப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதற்கிடையே பிரதமரின் பாதுகாப்பிற்காக சிறப்பு பாதுகாப்பு படை எஸ்பிஜி ஐஜி தலைமையில் சுமார் 25 பேர் டெல்லியில் இருந்து 3 நாட்களுக்கு முன்பே சென்னை வந்தனர். அவர்கள்பிரதமர் செல்லும் பாதைகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து சென்னை பழைய விமான நிலையத்தில் விவிஐபி பகுதியில் பிரதமரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆலோசனை கூட்டம் எஸ்பிஜி ஐஜி தலைமையில் நடந்தது. அதில் டெல்லி சிறப்பு பாதுகாப்பு படை உயரதிகாரிகள், தமிழக போலீஸ் உயரதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, விவிஐபி பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.    

கத்தியுடன் வந்த 2 போலீசார்

பிரதமர் மோடி விழா நடக்கும் நேரு விளையாட்டு அரங்கம் பகுதி அருகில் உள்ள பெரியமேட்டில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் காவல்துறையில் பணியாற்றுவது தெரிந்தது. அவர்கள் கத்திகள் மறைத்து வைத்திருந்தனர். விசாரணையில் மோடி வருகைக்காக நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் மாறு வேடத்தில் சமூக விரோதிகள் போல் போலீசார் வந்தது தெரியவந்தது.

2,640 கோடியில் கல்லணை கால்வாய் சீரமைப்பு

பிரதமர் மோடி துவக்கி வைக்கும் திட்டங்களில் ஒன்று கல்லணை கால்வாய் நவீனப்படுத்தும் திட்டம். 1928-34ல் இது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. பிரதான கால்வாய் 148 கிமீ நீளம், உப கால்வாய்கள் 636 கிமீ நீளம் கொண்டது. இந்த கால்வாய் மூலம் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 2,27,472 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இந்த கால்வாய் 2,640 கோடியில் நவீனப்படுத்தப்பட உள்ளது. கால்வாயின் கரைகளை பலப்படுத்ததுல், 25 நீரொழுங்கி குழாய்கள், 109 கிணற்று குழாய்கள், 131 சுரங்க நீர்வழிப்பாதை, 25 நீரொழுங்கிகள் மற்றும் 20 மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்காடா தொழில்நுட்பம். 108 கோடியில் செயல்படுத்தப்படும் இத்தொழில்நுட்பம் மூலம் நீர்மேலாண்மை நவீனமயமாகும் என்றும், திட்டம் நிறைவடையும் போது கல்லணை கால்வாயின் நீர் கொள்ளளவு 20 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>