7 உட்பிரிவுகளை இணைப்பதற்கான தேவேந்திர குல வேளாளர் திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் விரைவில் நிறைவேறும்

புதுடெல்லி: தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றாக இணைந்து தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2ம் கட்ட கூட்டத்தில் இம்மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியலில் தனித்தனியாக உள்ள தேவேந்திர குலத்தான், கல்லாடி, பள்ளர், குடும்பன், கடையான், பண்ணாடி, வத்திரியன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை இணைத்து, ‘தேவேந்திர குல வேளாளர்’ என ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள்  நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தேவேந்திர குல வேளாளர் பிரிவை பட்டிலினத்தில் இருந்து விடுவித்து, தனிப் பிரிவாக வகைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பரிந்துரைக்க, தமிழக அரசு ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. அக்குழு பரிந்துரையின் பேரில், 7 உட்பிரிவுகளும் ஒரே பிரிவாக மாற்றப்பட்டாலும் பட்டியலினத்தில் தொடரும் என்றும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை எப்போதும் போல் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், சேலம் திமுக எம்பி பார்த்திபனும் முறையிட்டார். இந்நிலையில், தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் பிரிவில் மாற்றம் செய்ய நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியமாகும். எனவே, 1950 அரசியலமைப்பு (தாழ்த்தப்பட்டோர் பட்டியல்) சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அமைச்சர் கிருஷண் பால் குர்ஜார் தாக்கல் செய்தார். முன்மொழியப்பட்ட மாற்றத்திற்கு இந்திய பதிவாளர் ஜெனரல் ஒப்புதல் அளித்திருப்பதாக மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசதங்களுக்கென தாழ்த்தப்பட்டோர் பட்டியல் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், தேவேந்திர குல வேளாளர்கள் என்ற தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை தற்போது நிறைவேற்றப்படுவதற்கான நடவடிக்கை, நாடாளுமன்றத்தில் தொடங்கி இருக்கிறது. இதனால், இக்கோரிக்கையை வலியுறுத்தி வந்த பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும், இப்பிரிவுகளை சேர்ந்த மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாடாளுமன்ற முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் என்பதால், இந்த மசோதா மீதான எந்த விவாதமும் நடக்கவில்லை. அடுத்ததாக, மார்ச் 8ம் தேதி 2ம் கட்ட பட்ஜெட் தொடர் மீண்டும் தொடங்க உள்ளது. அப்போது இந்த மசோதா மீது விவாதம் நடத்தி மக்களவையிலும், அதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>