×

காத்தோடு கரைஞ்சு போச்சு கம்பம் எம்எல்ஏ வாக்குறுதி...!கம்பம் தொகுதி எம்எல்ஏ, எஸ்டிகே. ஜக்கையன்

தேனி மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளில் கம்பம் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தொகுதியில் கம்பம், சின்னமனூர் நகராட்சிகளும், தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை, உத்தமபாளையம், அனுமனந்தன்பட்டி, புதுப்பட்டி,  ஓடைப்பட்டி பேரூராட்சிகளும், உத்தமபாளையம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட தேவாரம், மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், மல்லிங்காபுரம், கோகிலாபுரம் உள்ளிட்ட கிராமங்களும் உள்ளன.  தேனி மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை,  குறிப்பாக அதிக பெண் வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக கம்பம் உள்ளது. கடந்த தேர்தலின்போது இத்தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்டிகே.ஜக்கையன் பல தரப்பட்ட வாக்குறுதிகளை வாரி வழங்கி இருந்தார். அதிமுக மோதலில் சில காலம்  டிடிவி ஆதரவு அணியில் இருந்தார். பின்னர் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டவர், நேரடியாக முதல்வர் எடப்பாடியை சந்தித்து அதிமுகவுக்கு மாறினார். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டார். ஆனால், அவர்  அறிவித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. பிரசாரத்தின்போது, ‘கம்பம் தொகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்படும்’ என்றார். இப்போதோ, பாதாளச் சாக்கடைத் திட்டம் புவியியல் அமைப்பின்படி கம்பம்  நகருக்கு  செட்டாகாது என்பதால், மாற்றுத் திட்டம் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக கூறி வருகிறார்.

குடிநீரை காணோம்...
எரசக்கநாயக்கனூர் மற்றும் அதனை சுற்றி உள்ள, கிராமங்களுக்கு குடிநீரே வருவதில்லை. இதனால் நிரந்தர குடிநீர்த் திட்டம், கொண்டு வரப்படும் என்ற அவரது வாக்குறுதி, தண்ணீரில் எழுதிய எழுத்தாகவே இருக்கிறது. அரசு ஒயின்  தொழிற்சாலையும் அமைக்கப்படவில்லை. எரசக்கநாயக்கனூர் குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. திராட்சை விவசாயிகள் அதிகம் உள்ள கம்பம் பகுதியில், திராட்சையை இருப்பு வைத்து விற்கும் வகையில் குளிர்பதன கிடங்கு  திட்டத்தை மேம்படுத்தும் வாக்குறுதியும் கிடப்பில் கிடக்கிறது.

திமுக ஆட்சி திட்டம் முடக்கம்...
திராட்சை ஆராய்ச்சி நிலையம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டும், திட்டத்தை நிறைவேற்றவில்லை. தேவாரம் - கேரளாவை இணைக்கும் சாக்குலூத்து மெட்டு சாலை திட்டம் உடனே கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியும்,  உத்தமபாளையம் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது உள்ளிட்ட ஏதும் செய்யவில்லை. திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்கியதும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல்  இருந்ததும்தான் ஜக்கையன் எம்எல்ஏவின் சாதனையாக இருக்கிறது.

சாலைகளை சீரமைத்துள்ளேன்
கம்பம் தொகுதி எம்எல்ஏ எஸ்டிகே.ஜக்கையன் கூறும்போது, ‘‘தொகுதிக்கு செய்தது ஒரு விஷயம் என்றால் நான் சொல்லிவிட முடியும். ஆனால், தொகுதிக்காக நிறைய பணிகள் செய்திருக்கிறேன். கம்பம் பகுதியில் பழுதான சாலை என்று ஒரு   சாலையைக் கூட கைகாட்டிக் கூறிவிட முடியாது. அந்த அளவிற்கு சாலை சீரமைப்பை  சிறப்பாக செய்திருக்கிறோம். இப்படி பல திட்டங்களை தொகுதியில் நிறைவேற்றி இருக்கிறேன். ஒரு பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன். என் பணிகள்  மக்களுக்கு தெரியும்’’ என்றார்.

கம்பம் மக்கள் கவலையில் தவிப்பு
திமுக வேட்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘‘ஜக்கையன் எம்எல்ஏவானதும் தன் வாழ்க்கை, வளத்தின் மேம்பாடு குறித்தே நினைத்து செயல்பட்டார். கம்பம் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவதாகச் சொன்னவர், தொகுதி  மக்களை பாதாளத்திற்கே அழைத்துச் சென்று விட்டார். தொகுதிக்குள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட, மனதில் நிற்கும்படி செய்து தரவில்லை. நான் பதவி வகித்தபோது தொகுதிக்குள் செய்த எத்தனையோ சாதனைகளை இப்போதும்  பட்டியல் போட்டுக் காட்ட முடியும். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மக்களுக்கான குடிநீர் வசதிகள், கோயிலுக்கான கட்டிடங்கள் வரையிலும் திமுக ஆட்சியில் ஒரு பைசா கமிஷன் வாங்காமல் பலதரப்பட்ட பணிகள் செய்து  முடிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலோ இன்றைய எம்எல்ஏ,வின் வாக்குறுதிகள் காற்றில் பறந்ததால், தொகுதி மக்கள் மக்கள் மனதளவில் புழுங்கி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்’’ என்றார்.


Tags : Kaathodu Karainchu ,Pochu Kambam ,STK , Promise of Kattodu Karainchu Pochu Kambam MLA ...! Kambam Block MLA, STK. Jakkaiyan
× RELATED மற்ற கட்சிகளை உடைப்பதே பாஜகவின் வேலை: டெல்லி அமைச்சர் ஆவேசம்