×

நாலா பக்கம்: புதுவை - கேரளா - மேற்கு வங்கம் - அசாம்

சட்டி சுட்டதடா...புத்தி வந்ததடா...
கேரளாவில் சூடுபட்ட பூனையாக ஒருவர் கதறி கொண்டிருக்கிறார். அவர்தான் முன்னணி சினிமா இயக்குனர் மேஜர் ரவி. மோகன்லால்,  மம்மூட்டி அமிதாப் பச்சன் போன்ற பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்தவர். அதோடு, ஏராளமான  தமிழ்,  மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் பாஜ.வில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார். என்ன நடந்ததோ தெரியவில்லை. இப்போது அவர், பாஜ.வை கைவிட்டு காங்கிரசில் ஐக்கியமாகி விட்டார்.  அதுவரையில் பாஜ.வின் புகழ்பாடி கொண்டிருந்த அவர், இப்போது திட்டித் தீர்க்கிறார். ‘‘கேரளாவில் உள்ள 90% பாஜ தலைவர்களை நம்பவே  முடியாது. தலை் கனம் கொண்டவர்கள். சாதாரண மக்களின் பிரச்னை என்ன என்று கூட  அவர்களுக்கு தெரியாது.  பணம், பெயர், புகழை  சம்பாதிக்கவே கட்சியில் உள்ளனர்.  இதனால்தான், வெறுத்துப் போய் காங்கிரசில் சேர்ந்து விட்டேன்,’ என்கிறார் அவர்.

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கும்மாளம்
மேற்கு வங்கத்தில் கடந்த 6 ஆண்டுகளில் பாஜ அடைந்துள்ள வளர்ச்சி அபரிமிதமானது. 2014 மக்களவை தேர்தலில் பாஜ ஆட்சியை பிடித்த போதிலும், இந்த மாநிலத்தில் அது 2 இடங்களை மட்டுமே பிடித்தது. 2019 மக்களவை தேர்தலில் இதே  மாநிலத்தில் அது மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களை பிடித்தது. 2014 தேர்தலில் 17 சதவீதமாக இருந்த அதன் வாக்கு வங்கி, கடந்த தேர்தலில் 40% ஆக உயர்ந்தது. இம்மாநிலத்தில் பாஜ இப்போது செய்து வரும் அரசியல் பாணியை,  34 ஆண்கள் ஆட்சி செய்த கம்யூனிஸ்டுகளும், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திரிணாமுல்லும் கண்டதில்லை. அதனால்தான், அக்கட்சியின் வியூகங்களை உடைக்க முடியாமல் திணறி வருகின்றன. மேலும், திரிணாமுல் -  கம்யூனிஸ்ட்டுகள் - காங்கிரஸ் ஆகியவை தங்களுக்கு இடையே காட்டி வரும் பகைமை, பாஜ.வுக்கு சாதகமாகி இந்தளவுக்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

மிரட்டும் ஓவைசி மிரளும் கட்சிகள் அசாமில் நிம்மதி
நாடாளுமன்ற உறுப்பினரான அசாதுதீன் ஓவைசியின், ‘அகில இந்திய மஜ்லிஸ் இ இடிஹதுல் முஸ்லிமின்’ கட்சி, ஆந்திர, டெல்லி அரசியலையும் தாண்டி சமீபகாலமாக மற்ற மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களிலும் போட்டியிடுகிறது. பீகாரில்  இப்படிதான் வேட்பாளர்களை நிறுத்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரசின் மெகா கூட்டணிக்கு போக வேண்டிய முஸ்லிம் ஓட்டுகளை பிரித்து பாஜ.வின் வெற்றிக்கு வழிவகுத்தது மட்டுமின்றி, 5 எம்எல்ஏ,க்களையும் பெற்றார். இதே  பாணியில் மேற்கு வங்கம், அசாம் தேர்தல்களிலும் ஓவைசி களம் இறங்க உள்ளதாக பேச்சு அடிபட்டது. இதில், மேற்கு வங்கத்தில் போட்டியிடுவதை ஓவைசி உறுதி செய்து விட்டார். இது, மம்தாவின் முஸ்லிம் வாக்கு வங்கிக்கு மிகப்பெரிய  சேதத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதேபோல், அசாம் தேர்தலிலும் ஓவைசி வேட்பாளர்களை நிறுத்துவாரா என்ற சந்தேகமும், அச்சமும் உள்ளூர் சிறுபான்மை கட்சிகளிடம் இருந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ ‘அசாமில்  போட்டியில்லை’ என்று அறிவித்து விட்டார் ஓவைசி. இதனால், காங்கிரஸ் கூட்டணி தற்காலிகமாக நிம்மதியில் உள்ளது.

புதிய உறுப்பினரிடம் வசை வாங்கிய பாஜ
புதுச்சேரியில்  கடந்த தேர்தலில் ஒரு இடத்தை கூட பிடிக்காத பாஜ, இத்தேர்தலில் ஆட்சியை பிடிப்போம் என்று கூறி வருவது ஆ்ச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரம், ‘பிடித்தாலும் பிடித்து விடுவார்களப்பா... அவர்களுக்கு தெரியாத  தந்திரமா...’ என்றும் இம்மாநில எதிர்க்கட்சியினர் பேசுகின்றனர். இந்நிலையில், இம்மாநிலத்தில்  ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கையை  தீவிரப்படுத்தி உள்ளது பாஜ. இப்படி, ஊசுடு தொகுதியை சேர்ந்த வாக்காளர்  ஒருவர் பாஜ.வில்  உறுப்பினராக சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவருடைய முகவரியை உறுதி செய்வதற்காக, செல்போனில் பாஜ அலுவலக ஊழியர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர், ‘எனக்கு தெரியாம எப்படி கட்சி  உறுப்பினர் ஆக்கினீர்கள்? எனது செல்போன் நம்பரை உங்களுக்கு யார் கொடுத்தது,’ என கேட்டது மட்டுமின்றி, பாஜ.வின் செயல்பாடுகளையும் பிடிபிடியென பிடித்து விட்டார். இந்த உரையாடல்  தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி  உள்ளது.

Tags : Kerala ,New Delhi ,Assam ,West Bengal , Nala Page: New Delhi - Kerala - West Bengal - Assam
× RELATED சராசரியை காட்டிலும் தென் மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும்