×

கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சியில் திடீர் தலைகாட்டும் வைத்திலிங்கம்: ஓரங்கட்ட வரிந்து கட்டும் அதிமுகவினர்

ஒரத்தநாடு தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கடந்த தேர்தலில் திமுகவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்த முறையும் தான் வெற்றி பெற்றிருந்தால் சீனியரான தனக்கு அமைச்சரவையில் பதவி  கிடைத்திருக்கும். அது கிடைக்காமல் போய் விட்டதே என்ற ஆதங்கம் வைத்திலிங்கத்துக்கு உண்டு. சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த அவருக்கு ஜெயலலிதா 2016ல் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கினார்.
இந்த பதவி 2023ம் ஆண்டு முடிகிறது. அப்போது மீண்டும் தனக்கு எம்.பி. பதவி கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லாததால், தனது மாவட்டத்தை தக்க வைத்து கொள்ள மீண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக  துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் முனைப்பு காட்டி வருகிறார். ஒரத்தநாட்டில் தனது மகன் பிரபுவை நிறுத்தவும், தனக்கு திருவையாறு தொகுதியையும் குறி வைத்துள்ளார்.

ஆனால் எம்.பி. பதவியில் உள்ளவர்களுக்கு சீட் கிடையாது என்ற நிலையை அதிமுக தலைமை எடுத்தால் தனது மகனுக்கு சீட் பெறுவதில் உறுதியாக இருக்கிறார். திருவையாறை குறிவைத்து வைத்திலிங்கம் பணியாற்றி வரும் நிலையில்,  தற்போது கூட்டணி கட்சியான பாஜ திருவையாறு அல்லது தஞ்சையை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால் அதிமுகவினர், பாஜகவிற்கு கொடுக்க கூடாது என போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜ  வேட்பாளராக நிறுத்தப்பட உள்ள இருவர், தங்களது தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விட்டனர். இதனால் தஞ்சை, திருவையாறு தொகுதி அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர்.

ஒரத்தநாடு, திருவையாறு தொகுதிகளுக்கு சீட் கொடுப்பது பற்றி வைத்திலிங்கம்தான் பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால் தனக்கும், தனது மகனுக்கும் சீட் ஒதுக்கினால் அதிமுகவினர் அதிருப்தியாகி விடுவர். கட்சியில் பணியாற்றுவதில்  அமைதியாகி விடுவார்களோ என்ற அச்சம் வைத்திலிங்கத்திற்கு உள்ளது. அதே நேரத்தில் வைத்திலிங்கம் மீது தஞ்சை மாவட்ட அதிமுகவினர் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனால் வைத்திலிங்கம் சட்டமன்ற தேர்தலின் முன்னோட்ட  பணியாக கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வருகிறாராம்.


Tags : Vaithilingam ,party executives ,house show ,AIADMK , Vaithilingam abruptly nods at party executives' house show: marginalized AIADMK
× RELATED கை சின்னத்துக்கு போடும் ஓட்டு.. மோடிக்கு வைக்கும் வேட்டு..