50 சவரன், 10 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவியின் உல்லாச வீடியோவை காட்டி மிரட்டல்: கணவன் கைது

அண்ணாநகர்: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கவுதமன்(24). அதே பகுதியை சேர்ந்தவர் சாந்தி(24). இவர்கள் கல்லூரியில் படித்தபோது, நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது. பின்னர் இருவரும் சென்னை வந்து தனியார்  நிறுவனங்களில் பணிபுரிந்தனர்.  இதற்கிடையே, திருப்பூர் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சாந்தியை அழைத்து சென்று, கவுதமன் பதிவு திருணம் செய்துகொண்டுள்ளார். பின்னர் இவர்கள்  முகப்பேரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து  கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சாந்தியிடம் 5 சவரன் நகை மற்றும் 75,000 ரொக்கம் பெற்றுக்கொண்டு கவுதமன் நாமக்கல் சென்றுள்ளார். இதனையடுத்து, கவுதமனை சாந்தி தொடர்பு கொண்டபோது போன்  இணைப்பை துண்டித்து வந்துள்ளார்.  இதனால், அதிர்ச்சியடைந்த சாந்தி, கவுதமனின் தாயார் சுமதிக்கு போன் செய்தபோது அவர், சாந்தியை தகாத வார்த்தைகளால் திட்டி இணைப்பை துண்டித்தாக கூறப்படுகிறது.இதனையடுத்து, சாந்திக்கு  போன் செய்த கவுதமன், “உன்னுடன் உல்லாசமாக இருக்கவே உன்னுடன் திருமணம் என்ற நாடகத்தை நடத்தினேன்.

மேலும், உன்னுடன் குடும்பம் நடத்த வேண்டுமென்றால், 50 சவரன் நகை மற்றும் 10 லட்சம் வரதட்சணையாக உனது வீட்டில் வாங்கிவர வேண்டும். இல்லையென்றால் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை வலைதளத்தில்  வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன்” என மிரட்டினார். இதனால், அதிர்ச்சியடைந்த சாந்தி, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமனை தேடி  நாமக்கல் மாவட்டத்திற்கு விரைந்தனர்.  போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கவுதமன் குடும்பத்துடன் தலைமறைவானார். நேற்று முன்தினம்  போலீசார் கவுதமனை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக, வழக்கு  பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த திருமணம் சாந்தியின் பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்தது தெரியவந்தது.

Related Stories:

>