நன்னடத்தை மீறிய ரவுடிகளுக்கு சிறை

சென்னை: தண்டையார்பேட்டை அம்மனி அம்மன் தோட்டம் பகுதியை சேர்ந்த சதீஷ் (எ) மாங்கா சதீஷ் (27). புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது ஒரு கொலை வழக்கு, 3 கொலை முயற்சி  வழக்குகள் உட்பட சுமார் 9 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும் ஒரு வருட காலத்திற்கு  எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன் எனவும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால், கடந்த நவம்பர் 24ம் தேதி புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லையில் உள்ள ஒரு கடையில் மாமூல் கேட்டு  தகராறு செய்து கடையை உடைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். எனவே, நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறியதற்காக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி, குற்றவாளி  நன்னடத்தை பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த ஒரு வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 242 நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

அதன்படி, மாங்கா சதீஷ் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீபுதுப்பெருங்களத்தூர் ஆர்.எம்.கே.நகர் நேரு தெருவை சேர்ந்தவர் ஜெபசேகர்(38). சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது 2 குற்ற  வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஜெபசேகர் கடந்த ஆண்டு 18ம் தேதி புனித தோமையார்மலை துணை ஆணையர் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாக நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி  கொடுத்தார்.  

ஆனால்,  ஜெபசேகர் பீர்க்கன்காரணை  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை கத்தியைக்காட்டி மிரட்டியது  தொடர்பாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். நன்னடத்தை மீறிய குற்றத்திற்காக 322   நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>