161 ரன் விளாசினார் ரோகித் முதல் இன்னிங்சில் இந்தியா ரன் குவிப்பு

சென்னை: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், தொடக்க வீரர் ரோகித் ஷர்மாவின் அபார ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன் குவித்துள்ளது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில்  நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இந்திய அணியில் பும்ரா, நதீம், வாஷிங்டனுக்கு பதிலாக அக்சர் படேல் (அறிமுகம்), குல்தீப், சிராஜ் இடம் பெற்றனர்.ரசிகர்களின் ஆரவார  வரவேற்புக்கிடையே ரோகித், கில் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். கில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, ரோகித் - புஜாரா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ரோகித் 47 பந்தில் அரை சதம்  அடித்தார். புஜாரா 21 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனால் இந்தியா 21.2 ஓவரில் 86 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், ரோகித்துடன் இணைந்து துணை கேப்டன் ரகானே பொறுப்புடன் கம்பெனி கொடுத்தார். அதிரடியைத் தொடர்ந்த ரோகித் 130 பந்தில் 14 பவுண்டரி, 2 சிக்சருடன் சதத்தை நிறைவு செய்தார். ரோகித் - ரகானே ஜோடியை பிரிக்க  முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் விழிபிதுங்கினர். ரோக்கித் 150 ரன்னை கடந்து முன்னேற, மறு முனையில் ரகானே அரை சதம் அடித்தார். இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோகித் 161 ரன் எடுத்து (231 பந்து, 18  பவுண்டரி, 2 சிக்சர்) லீச் பந்துவீச்சில் மொயீன் அலி வசம் பிடிபட்டார். ரோகித் - ரகானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு 162 ரன் சேர்த்து அசத்தியது. ரகானே 67 ரன் எடுத்து (149 பந்து, 9 பவுண்டரி) மொயீன் சுழலில் கிளீன் போல்டானார். 248/3  என்ற நிலையில் இருந்து 249/5 என இந்தியா திடீர் சரிவை சந்தித்தது. அஷ்வின் 13 ரன் எடுத்து ரூட் பந்துவீச்சில் போப் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன் (88 ஓவர்) குவித்துள்ளது. பன்ட் 33 ரன், அக்சர் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சில் லீச், மொயீன் தலா 2, ஸ்டோன், ரூட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.  இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories:

>