×

3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: விவசாய சங்க தலைவர் கைது காட்டுமிராண்டித்தனமானது: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: விவசாய சங்க தலைவரை கைது  செய்தது காட்டுமிராண்டித்தனமானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: திருச்சி - சிதம்பரம்  நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக வீராநந்தபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளிடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  இளங்கீரனை அடித்து இழுத்து சென்று அராஜகமாக கைது செய்துள்ள அதிமுக ஆட்சிக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்றேன்.“விவசாயி” என்று வேடம் போட்டு, நகர்வலம் வந்து கொண்டே தனக்கு கீழ் உள்ள காவல்துறையை விட்டு விவசாய  சங்க தலைவரை அராஜகமாக கைது செய்திருக்கும் பழனிசாமி, மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்துள்ளார்.

“மனிதாபிமானம் கிலோ என்ன விலை” என்று விவசாயிகளிடம் கேட்கும் பழனிசாமி, ‘என்னை வந்து பார்த்து விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு நன்றி தெரிவித்தார்’ என்பதை உள்நோக்கமாக வைத்து, இளங்கீரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு  போட்டு மனித நேயமற்ற முறையில் கைது செய்திருப்பது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை. விவசாயிக்கு ஒரு கையில் “கடன் தள்ளுபடி அறிவிப்பு” இன்னொரு கையில் கடுமையாக தாக்கி “கைவிலங்கு” போடுவது என்ற முதல்வர்  பழனிசாமியின் வேடம் இதோ கலைந்து விட்டது. அதிகார வெறி தலைக்கேறுவதால் படுதோல்வி அடைய போவது முதல்வர் பழனிசாமிதானே தவிர, போராடும் விவசாயிகள் அல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : union leader ,Arrest ,MK Stalin , Prosecution under 3 sections: Arrest of agrarian union leader barbaric: MK Stalin strongly condemns
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...