விவசாய அமைச்சர் பதவியை கேட்டேனா? அமைச்சர் சி.வி.சண்முகம் மறுப்பு

சென்னை: விவசாயத்துறை அமைச்சர் பதவியை கேட்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெளிவுபடுத்தியுள்ளார்.  கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் விவசாய துறை அமைச்சர் துரைக்கண்ணு  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். இதற்கிடையே, அவர் வகித்த விவசாயத்துறையை தனக்கு வழங்குமாறு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கோரிக்கை வைத்ததாக  தினகரனில் செய்தி வெளிவந்தது. ஆனால், இந்த தகவலுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம், தனது வக்கீல் மூலம் மறுப்பு தெரிவித்து அறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தன் மீது திட்டமிட்டே அவதூறு பரப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி  எந்த ஆதாரமும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் தான் விவசாய அமைச்சர் பதவியை கேட்கவில்லை. அதற்காக சாதி கோஷமும் எழுப்பவில்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தான் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றி வரும் நிலையில் தன் மீது வேண்டப்படாத சிலர் இந்த தகவலை பரப்பியுள்ளனர். இதை நிச்சயமாக மறுக்கிறேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் சி.வி.சண்முகம் மீது எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் இந்த செய்தி வெளியிடப்பட்டது. தற்போது அந்த செய்தியை அவர் மறுத்துள்ளார். இதுதொடர்பான அவரது விளக்கம் தற்போது வெளியிடப்படுகிறது.செய்தி காரணமாக அவரது  மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்.

Related Stories:

>