×

திமுக மாபெரும் வெற்றி பெற்று பதவிப் பிரமாணம் எடுத்த அடுத்த நாள் மனுக்கள் மீது நடவடிக்கை: விருத்தாசலத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் பேசியதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் உங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மாநாடு போல திரண்டிருக்கிறீர்கள். உங்கள் கோரிக்கை மனுக்களை இங்கு பதிவு செய்துள்ளீர்கள். அதற்கு ஒரு பதிவு சான்று கொடுத்திருப்பார்கள். இந்த  ஒப்புகை சீட்டு, பதிவு எண் மிக முக்கியம். இதனை வாங்காதவர்கள் மறக்காமல் வாங்கி கொள்ளுங்கள். இந்த அட்டைக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று, பதவிப்பிரமாணம் எடுத்த அடுத்த நாள் இந்த  மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்போம். நிறைவேறவில்லையெனில் இந்த அட்டை எண்ணை காண்பித்து என்ன ஆச்சு என கேட்கும் உரிமை இருக்கிறது. கோட்டைக்கு வரலாம், முதல்வர் அறைக்கு வந்தே கேட்கலாம்.

தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு என்ன தேவை, தமிழக எதிர்காலத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதனை தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம். மக்களை மறந்த மக்கள் விரோத ஆட்சியை கண்டிக்க  நேரமும் காலமும் நெருங்கி விட்டது. கொரோனாவை விட கொடுமையான ஊழல் செய்த கொள்ளை கூட்டத்துக்கு தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாளைய தமிழகம் நல்ல தமிழகமாக அமையும். கொரோனா காலத்தில் மருந்து  வாங்கியதில் கோடி கோடியாக ஊழல் செய்துள்ளனர். மருந்து முதல் பளீச்சிங் பவுடரில் ஊழல் செய்தது பழனிசாமி ஆட்சிதான் என்றார்.. சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பைபாஸில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மக்களிடம் செல்... மக்களுடன் இரு... என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். அதனடிப்படையில் இங்கு வந்திருக்கிறேன். இன்றைக்கு இருக்கும் நவீன தமிழ்நாடு கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. மத்திய ஆட்சியில் 13 ஆண்டு காலம் அங்கம்  வகித்த தி.மு.க. என்ன திட்டங்களை கொண்டு வந்தது என முதல்வர் எடப்பாடி கேட்கிறார். அவர் இங்குதான் இருக்கிறாரா அல்லது வேற்று கிரகத்தில் இருந்தாரா?.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மத்திய அரசின் மூலம் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஏராளம். அதனை பட்டியல் போட்டால் இன்று நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். மத்திய பட்ஜெட்டில் 11 சதவீத அளவுக்கு திட்டங்களை  கொண்டு வந்திருக்கிறோம். 69 திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். குறிப்பாக 100 ஆண்டுகால கோரிக்கையான தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியை பெற்றுக்கொடுத்தோம். கப்பல் மற்றும் சாலை போக்குவரத்தில் 56 கோடியே 624  லட்சத்தில் பல்வேறு திட்டப்பணிகளை கொண்டு வந்துள்ளோம். உரக்கடத்தில் தேசிய மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம், சேலம் உருக்காலை நவீனப்படுத்தும் திட்டம், தாம்பரத்தில் தேசிய திட்ட ஆராய்ச்சி மையம், சேலம் புதிய ரயில்வே  மண்டலம், சேலத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், சேது சமுத்திர திட்டம், நெசவாளர்கள் துன்பத்தை போக்கும் வகையில் சென்வாட் வரி நீக்கம், நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்குவது,  பொடா சட்டம் ரத்து, மீட்டர் கேஜ் பாதைகளை அகல ரயில்பாதையாக மாற்றம், 96 ரயில்வே மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், கடல்சார் பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம்,

துறைமுக விரிவாக்கப்பணி, கரூர், ஈரோடு, சேலம் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய ஆட்சியில் தமிழகத்துக்கு என்ன திட்டம் என்று கேட்டால் எதையும் சொல்ல  முடியவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்துள்ளதாக பழனிசாமி கூறுகிறார். ஒரு செங்கல்லைகூட இன்னும் வைக்கவில்லை. 11 மருத்துவக்கல்லூரி கொண்டு வந்ததாக கூறுகிறார். ஆனால் அது அடிக்கல் அளவிலேயே  இருக்கிறது. பேரிடர் நிதியை மத்திய அரசிடம் இருந்து வாங்க முடிந்ததா. நீட் தேர்வில் விலக்கு பெற முடிந்ததா, இந்தி திணிப்பை தடுக்க முடிந்ததா என எதையுமே முதல்வரால் செய்ய முடியவில்லை. மத்திய அரசிடமிருந்து எதையும் பெற  முடியாத உதவாக்கரையாக பழனிசாமி இருக்கிறார். தொழில், கல்வி உள்ளிட்ட துறைகளில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது, அதற்கு விருது கொடுத்ததாக சொல்கிறார். யார் அந்த விருதை கொடுத்தார்கள் என்று சொல்லவில்லை. நமக்கு  மக்கள் தரும் ஆதரவையும், எழுச்சியையும் பார்த்துவிட்டு பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. பிரசார கூட்டத்தில், ஆட்சி அமைக்கும் எண்ணம் தனக்கு இல்லையென்று பேசுவதன் மூலம் தெரியவந்துள்ளது. மீண்டும் ஆட்சி அமைக்க  போவதில்லை என்பதால் சுருட்ட வேண்டியதையெல்லாம் சுருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

உழைப்பை கற்றுத்தர வேண்டியதில்லை
மு.க.ஸ்டாலின் பேசுகையில், உழைப்பு என்பது என்னவென்று ஸ்டாலினுக்கு தெரியாது என முதல்வர் எடப்பாடி  கூறுகிறார். அஞ்சாமல் சிறைக்கு செல்வது, மக்களுக்காக போராடுவது, உங்களின்  ஒருவனாக இருப்பது, மக்கள் துன்பங்களில்  பங்கெடுப்பது, துயரங்களில் தோள்  கொடுப்பதைதான் கலைஞர் எனக்கு கற்று கொடுத்திருக்கிறார். மக்களுக்கு  ஒன்று என்றால் முதலில் ஸ்டாலின்தான் அவர்கள் இடம் தேடி போனேன்.  தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட  குடும்பங்களை  சந்தித்தது, நீட் தேர்வில் பலியான அனிதாவின் இல்லத்துக்கு சென்றது. வேளாண்  சட்டங்களுக்கு எதிராகவும், மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும் போராடினேன். காலில் ஊர்ந்துபோன எடப்பாடி பழனிசாமியிடம் உழைப்பை  கற்றுக்கொள்ள ஸ்டாலின் தயாராக இல்லை என்றார்.

Tags : DMK ,Vriddhachalam ,MK Stalin , Action on petitions the day after the DMK won a landslide victory: MK Stalin's commitment at Vriddhachalam
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...