×

புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக மாற்ற திட்டம்? முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது, தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60ஆக மாற்றுவது குறித்து  ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 2ம் தேதி கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். தொடர்ந்து 3 நாட்கள் நடந்த கூட்டம் தேதி  குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இந்த மாத இறுதியில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்  செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று பகல் 11.50 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை  கூட்டம் நடந்தது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை எந்த தேதியில் தாக்கல் செய்யலாம் என்பது குறித்தும், தற்போதைய சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதாலும், இரண்டு மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளதாலும் மக்களுக்கு  என்னென்ன கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பது குறித்தும் அமைச்சரவை  கூட்டத்தில் ஆலோசனை நடத்தி ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59ஆக உள்ளது. இதை 60ஆக உயர்த்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டதாக  கூறப்படுகிறது. இதுபற்றிய சட்ட மசோதா வருகிற சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றவும் தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

காரணம், தற்போது தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வரும் மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளிக்க வேண்டும் என்றால் பல கோடி ரூபாய் செலவாகும். இதனால் 60 வயதாக  உயர்த்தினால், தற்போதைய நிதி நிலைமையை சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதேபோன்றுதான், கடந்த ஆண்டும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஓய்வு வயதை  60 ஆக உயர்த்துவதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலையின்மை அதிகரிக்கும், பதவி உயர்வு பாதிக்கும் என்று அரசு ஊழியர்களும், இளைஞர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர். அமைச்சரவை  கூட்டத்தில் எடுத்த முடிவின்படி வருகிற 24 அல்லது 25ம் தேதி தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.



Tags : government employees ,Chief Minister ,meeting ,Cabinet , Permission for new business projects Plan to change the retirement age of government employees to 60? The Cabinet meeting was chaired by the Chief Minister
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்