திருப்பூர் - மங்கலம் ரோடு சீரமைக்காததால் அவதி

திருப்பூர்: திருப்பூர் மங்கலம் ரோடு குடிநீர் திட்டப்பணிக்காக தோண்டப்பட்டு, பணி முடிவடைந்தும் சாலை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டு பல ஆண்டுகளாகியும் மாவட்டத்திற்கான அடிப்படை வசதிகள் இது வரை சரி வர செய்யவில்லை. இதனால், தினமும் மாநகரம் மற்றும் மாவட்டப்பகுதிகளில் தினமும் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால், மாவட்ட நிர்வாகம் இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், நான்காவது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக மேட்டுப்பாளையத்திலிருந்து அவிநாசி மங்கலம் வழியாக திருப்பூர் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட மங்கலம் ரோடு பெரியாண்டிபாளையம் முதல் குளத்துப்புதூர் வரை கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டது. பின்னர், குறிப்பிட்ட பகுதி வரையில் மட்டும் தற்போது தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. ஆனால், மீதமுள்ள இடத்தில் தார்ச்சாலை போடவில்லை.

இதனால், லேசான மழை பெய்தாலும் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், தினமும் பல்லாயிரக்கணக்கான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வரக்கூடிய பிரதான ரோடு இவ்வாறு இருப்பதினால் வாகன ஓட்டிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதே போன்று, வஞ்சிப்பாளையம் முதல் காவிலிபாளையம் பிரிவு வரையிலும் ரோடு மோசமாக உள்ளது. எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>