×

பணகுடி பஸ் ஸ்டாண்டில் கிடந்த ரூ.33 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த வியாபாரிக்கு பாராட்டு

பணகுடி: பணகுடி பஸ் ஸ்டாண்டில்  கீழே கிடந்த ரூ.33 ஆயிரத்தை   போலீசாரிடம்  ஒப்படைத்த  பேக்கரி கடை  உரிமையாளரை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். பணகுடி வள்ளுவர் தெருவை சேர்ந்த  அந்தோணிசாமி மகன்  ஆரோக்கியபிரபு  (30). இவர் தனியார் பார்மஸியில்  விற்பனை பிரதிநிதியாக பணகுடியில் பணிபுரிந்து வந்தார்.  தினமும்  பணகுடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள  மெடிக்கல் கடைகளில் பண வசூல் செய்து  அதனை ஏ.டி.எம். மூலம்
பார்மஸி கம்பெனிக்கு அனுப்புவது  வழக்கம். இந்நிலையில்  நேற்று பணகுடியில் உள்ள மெடிக்கல் கடைகளில்  மருந்துகளை விற்பனை செய்து விட்டு ரூ.33ஆயிரத்தை  ஒரு பார்சலில் கட்டி   தனது பேண்ட் பின் பாக்கெட்டில்  வைத்தவாறு ஏ.டி.எம்.க்கு  சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பணம் தவறி பணகுடி பஸ் ஸ்டாண்ட் அருகே  ரோட்டில் விழுந்துள்ளது.

அப்போது அவ்வழியே வந்த பணகுடி ஆசாத் தெருவை சேர்ந்த  பேக்கரி கடை உரிமையாளர்  இஸ்மாயில் மகன் கனி  (42) காகித பொட்டலம்  கீழே கிடந்ததை கண்டெடுத்தார். அதனை பிரித்து பார்க்கவே அதில் ரூபாய் கட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக  பணகுடி போலீஸ் ஸ்டேஷன் சென்று இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீதிடம் ரூ.33 ஆயிரத்தை  ஒப்படைத்தார். மேலும் அவர்  பணம் பற்றிய விபரங்களை கூறினார். இந்நிலையில் பணத்தினை தவற விட்ட  ஆரோக்கியபிரபு  போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்தார். அங்கு இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு பிறகு   பணத்தினை போலீசில் ஒப்படைத்த கனியை வரவழைத்து   ஆரோக்கியபிரபுவிடம் பணத்தினை வழங்க செய்தார். மேலும் பணத்தை கண்டெடுத்து உடனடியாக அதனை போலீசாரிடம் ஒப்படைத்த கனியின் நேர்மையை இன்ஸ்பெக்டர்  சாகுல் ஹமீது, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன்  உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.

Tags : trader ,bus stand ,Panakudi , Congratulations to the trader who handed over Rs. 33,000 left at the Panakudi bus stand
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...