×

போராட்டங்களில் உயிரிழந்த விவசாயிகளுக்காக மவுன அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி: சபை மரபை மீறியதாக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்!!

டெல்லி: விவசாய போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்காக மக்களவையில் ராகுல் காந்தி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். திரிணாமுல் காங்கிரஸ், திமுக உறுப்பினர்களும் மவுன அஞ்சலி செலுத்தினர். இதன் மூலம் ராகுல் காந்தி சபை மரபை மீறி விட்டார் என்று பாஜக எம்பிக்கள் சபாநாயகரிடம் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்தனர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று முன்தினம் மக்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து பேசினார். அப்போது விவசாய போராட்டங்களில் இதுவரை 200 பேர் இறந்து விட்டதாக கூறிய ராகுல் காந்தி, அவர்களுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவதாக கூறினார். அவருடன் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உறுப்பினர்களும் மவுன அஞ்சலி செலுத்தினர். இதன் மூலம் ராகுல் காந்தி சபை மரபை மீறி விட்டார் என்று கூறி பாஜக எம்.பி.க்கள் சஞ்சய் ஜெய்ஸ்வால், நிஷிகாந்த் துபே, பிபி சவுத்ரி மற்றும் மீனாட்சி லேகி ஆகியோர் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம்  ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக பாஜக எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், மக்களவையில் முதன் முறையாக, ஒரு எம்.பி. அனைவருக்கும் எழுந்து மவுன அஞ்சலி செலுத்த உத்தரவு பிறப்பிப்பதைக் கண்டோம். சில எம்.பி.க்கள் அதைச் செய்தார்கள். என்வே உத்தரவு பிறப்பித்த ராகுல் காந்தி மற்றும் எழுந்த அனைத்து எம்.பி.க்களுக்கும் எதிராக மக்களவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். பாஜக தலைமை கொறடா ராகேஷ் சிங் கூறுகையில், ராகுல் காந்தியின் செயல் அதிர்ச்சியூட்டுகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாது. இது அவை என்னும் கோவிலை களங்கப்படுத்தும் செயல். மவுன அஞ்சலி செலுத்துவது தொடர்பாக ராகுல் காந்தி முன்னரே அனுமதி பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பாக அவர் ஒரு கோரிக்கையை வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : Rahul Gandhi ,protests ,BJP , ராகுல் காந்தி
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...