×

சாதி மறுப்பு திருமணத்தால் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் இளைய தலைமுறையினருக்கு நீதிமன்றம் உறுதுணையாக இருக்கும் : உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி : சாதி சமூக பிரிவினையால் உண்டாகும் பதற்றத்தை குறைக்க கலப்பு திருமணங்கள் வழிவகுக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கலப்பு திருமணம் தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த 8ம் தேதி நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை குறிப்பிட்டுள்ளது. படித்த இளைஞர்கள் தங்களது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து கலப்பு திருமணம் செய்து கொள்வதால் சாதி, சமூகம் தொடர்பாக ஏற்படும் பதற்றம் குறைய வழி வகுக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

சட்ட மேதை அம்பேத்கரின் வரிகளை மேற்கோள்காட்டி உள்ள நீதிபதிகள், சாதி, சமூக பிரிவினையை போக்க சிறந்த தீர்வாக கலப்பு திருமணங்கள் அமையும் என்றும் தெரிவித்துள்ளனர். திருமண வயதை எட்டிய இருவர் தம்பதி ஆவத்துக்கு அவர்களுடய சம்மதம் இருந்தால் போதும் என்று கூறியுள்ள நீதிபதி, குடும்பத்தினரோ சாதியோ சம்மதிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை என்றும் கூறினார்.

ஆனால் சாதி மறுப்பு திருமணம் செய்யும் இளைஞர்கள் சமூகத்தில் அச்சுறுத்தல்களை சந்திக்க நேரிடுவதாக கூறியுள்ள நீதிபதி, இது போன்ற இன்னல்களை எதிர்கொள்ளும் இளைய தலைமுறையினருக்கு நீதிமன்றம் உறுதுணையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். சமூக முக்கியத்துவம் வாய்ந்த சாதி மறுப்பு திருமண வழக்குகளில் காவல்துறையினர் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து காவலர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.


Tags : Court , உச்சநீதிமன்றம்
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...