×

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு பாராட்டுக்குரியது: பல்டியடித்த கனடா பிரதமர்!!

டெல்லி : மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 80 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் நடத்திய 12 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துவிட்டன. இதற்கிடையே குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதில் ஒரு விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதே போன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கடந்த ஆண்டு இறுதியில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டு இருந்தார். இவரது கருத்து மத்திய அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை இந்தியாவின் உள் விவகாரம் என உடனடியாக மத்திய அரசு பதிலடி கொடுத்தது. இதற்கிடையே பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர் தொலைபேசி வாயிலாக அண்மையில் பேசியுள்ளார்.அப்போது இந்தியா தடுப்பூசியை பல்வேறு நாடுகளுக்கு அளிப்பதை பாராட்டினார். இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,விவசாயிகள் போராட்டத்தில் ஜனநாயகத்திற்கு ஏற்ற பேச்சுவார்த்தை பாதையை தேர்ந்தெடுத்த இந்தியாவின் முயற்சிகளை கனடா பிரதமர் பாராட்டியுள்ளார். கனடாவில் உள்ள இந்திய தூதரக ஊழியர்கள், வளாகங்களுக்கு பாதுகாப்பு வழங்க தனது அரசுக்கு பொறுப்பது உள்ளது என்றும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து அப்போராட்டத்தை திசைதிருப்பியதாக மத்திய அரசு சுட்டிக்காட்டும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடமிருந்து கனடாவில் உள்ள இந்தியர்களையும், அமைச்சக ஊழியர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்,என்றார்.  


Tags : Central Government ,Delhi ,Canada , கனடா பிரதமர்
× RELATED இந்திய வம்சாவளி தம்பதி, மகள் கனடாவில் மர்ம சாவு